விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்யில் உள்ள வி. சாலை கிராமத்தில் நடைபெற்று வருகிறது. தவெக கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின் நடத்தப்படும் முதல் மாநில மாநாடு இதுவாகும். எனவே, விஜய் என்ன பேசப் போகிறார் என்பதை எதிர்பார்த்து மக்களும், தொண்டர்களும், ரசிகர்களும், அரசியல் கட்சிகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
முன்னதாக, தொண்டர்கள் மத்தியில் கையசைத்த விஜய், நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் தொண்டர்களை வரவேற்கும் விதமான மேடையுடன் இணைக்கப்பட்டிருந்த நடைபாதையில் நடந்துசென்று, அவர்களை கையசைத்து வரவேற்றார். அப்போது, தொண்டர்கள் தங்கள் கையில் இருந்த கட்சிக் கொடி துண்டுகளை விஜயின் மீது வீசி வரவேற்றனர். அந்த நேரத்தில் கீழே விழுந்த துண்டுகளை எடுத்து தன் தோளில் போட்டபடி தொண்டர்களின் ஆரவாரங்களுக்கு இடையே நடந்து சென்றார்.
தொடர்ந்து, ராணுவ உடை அணிந்திருந்த ஒருவர் நடைபாதையின் மீது ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்தார். உடனடியாக நின்று அவருக்கு பதில் சல்யூட் அடித்துவிட்டு, அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார் விஜய். தொடர்ந்து தலைவர்கள் மற்றும் தியாகிகளின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: தேர்தல் களத்தில் வாக்காளர்களை எதிர்கொள்ள தவெகவுக்காக என்ன சின்னத்தை விஜய் கேட்கப்போகிறார்?
தலைவர்களுக்கு மரியாதை: இதில் அம்பேத்கர், காந்தி, காமராஜர், பாரதியார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, திருப்பூர் குமரன் மற்றும் முத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் சேகரனார், இரட்டைமலை சீனிவாசன், வஉசி சிதம்பரனார், ஒண்டிவீரன் உள்ளிட்டவர்களின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து 100 அடி உயர கொடிக்கம்பத்தில் அக்கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார் விஜய். பின்னர், தவெக கட்சியின் உறுதி மொழியை அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் வாசிக்க அனைவரும் பின் தொடர்ந்து கூறினர்.