தஞ்சாவூர்: கும்பகோணம் அப்புக்குட்டித் தெருவில் வசிக்கும் மாரியப்பன் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நாகவள்ளிக்கு அவரது தாயார், கும்பகோணம் அருகேயுள்ள இன்னம்பூர் கிராமத்தில் உள்ள சிறிய கூரை வீட்டுடன் கூடிய நிலப்பகுதியைக் கடந்த 2021ம் ஆண்டு தானமாக வழங்கியுள்ளார்.
இந்நிலையில், மாமியார் பெயரில் உள்ள பட்டாவை, தான செட்டில்மண்ட் மூலம் கிடைத்த சொத்திற்கு, தனது மனைவி நாகவள்ளி பெயரில் பட்டா மாற்றம் செய்து தர மாரியப்பன் விண்ணப்பித்து இருந்தார். இதனையடுத்து பட்டா மாற்றம் செய்து தர, இன்னம்பூர் கிராம நிர்வாக அலுவலரான மதியழகன்(59), மாரியப்பனிடம் ரூபாய் 5 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனைக் கொடுக்க விரும்பாத மாரியப்பன் இது குறித்து தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த ஆலோசனையின் பேரில் மாரியப்பன், 3 ஆயிரம் ரூபாயை முன்பணமாக கொடுக்கப்பதாக தெரிவித்துள்ளார். இதன்படி லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த 3 ஆயிரம் ரூபாயை மாரியப்பன், நேற்றிரவு கும்பகோணம் வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் வைத்து கிராம நிர்வாக அலுவலர் மதியழகனிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி நந்தகோபால் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கிராம நிர்வாக அலுவலர் மதியழகனை கையும் களவுமாகப் பிடித்து தடயங்களைச் சேகரித்துக் கொண்டு அவரை உடனடியாக கைது செய்தனர். மதியழகன் இன்னும் பணி ஓய்வு பெற 8 மாதங்களே உள்ள நிலையில், அவர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது கிராம நிர்வாக அலுவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக லஞ்ச வழக்கில் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை சார் பதிவாளருக்கு சொந்தமான காரில் இருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சேத்தூர் சார்பதிவாளர் ஆபிஸில் ரூ.14,800 பறிமுதல்.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!