மயிலாடுதுறை: விஜயதசமியை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் அரசு உதவிபெறும் மழலையர் பள்ளி மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், புதிதாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு மயில் இறகால் நாக்கில் தேன் தடவி, நெல்லில் அகரம் எழுதி அவர்களின் கல்வி வாழ்க்கையை தொடக்கி வைத்தனர்.
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக திகழும் நவராத்திரி பண்டிகை ஆண்டுதோறும் ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி பண்டிகையில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவது பிரதானமாக விளங்குகிறது. இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையானது அக்டோபர் 3ஆம் தேதி முதல் தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கோயில்களில் விசேஷ பூஜை நடைபெறும். நவராத்திரி வரும் நவமி நாள் ஆயுத பூஜை என்றும், சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மாணவர்கள் புத்தகங்கள் வைத்து வணங்குவார்கள். விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என தொடங்கப்படுகிற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம்.
அவ்வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு இன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டத்துடன் நடைபெற்றது. அதில், மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரசு உதவிபெறும் மழலையர் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதையும் படிங்க: நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்த பெரியநாயகி அம்மன்!
இதையொட்டி புதிதாக பள்ளிக்கு வந்திருந்த குழந்தைகளுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில், யானை, குதிரை, ஆடு ஊர்வலத்துடன், மேலவாத்தியங்கள் முழங்க பள்ளிக் குழந்தைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பள்ளியில் தருமபுரம் ஆதீனகட்டளை சுவாமிகள் சிறப்பு பூஜைகளை செய்தார். தொடர்ந்து, பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு தருமபுரம் ஆதீனம் மடாதிபதி நாக்கில் மயிலிறகால் தேன் தடவி, நெல்லில் அகரம் எழுத வைத்து ஆசி வழங்கினார். இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
இதேபோல் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வித்தியாரம்பம் நிகழ்ச்சியில், பள்ளி வளாகத்தில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. இதில், குழந்தைகளை பெற்றோருடன் அமர வைத்து, ஆரம்பக் கல்வியான "அகரம்" எழுத வைத்து கல்வியை தொடங்கி வைத்தனர்.