கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லிமலை வனப்பகுதியில் காட்டு யானை மற்றும் பிற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதியில் உணவு மற்றும் நீர்நிலைகளை தேடி அலையும் காட்டு யானைகள், இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்து விவசாய விளைபொருள்களை சேதப்படுத்தி வருவதோடு, அவ்வபோது மனிதர்களையும் தாக்கி வருவது தொடர் கதையாகி வருகிறது.
தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் ஏற்படும் கடும் வறட்சி காரணமாக காட்டு யானை மற்றும் பிற வனவிலங்குகள் வனப்பகுதியில் இடம்பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் செல்வது அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று செவ்வாய் கிழமை இரவு நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி காட்டு யானை, சமயபுரம் சாலையைக் கடந்து, எதிர்பாராத விதமாக அருகே உள்ள மக்கள் நடமாட்டம் உள்ள வீதிக்குள் நுழைந்தது.
அப்போது வீட்டின் முன் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு நடுவே சென்ற போது, அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், “கணேசா போய்விடு.. விநாயகா போய்விடு..” என்று குரல் கொடுக்க, அதற்கு கட்டுப்பட்டு ஆடி அசைந்தபடி வாகனங்களை சேதப்படுத்தாமல் அங்கிருந்து வெளியேறி கல்லார் வனப்பகுதிக்கு சென்றது. இது குறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி, வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: தண்ணி தொட்டி தேடி வந்த யானை குட்டி நான்.. வைரல் வீடியோ! - Elephant Drinking Water Video