திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், நாச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (38). இவர் அப்பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த 28 வயது இளைஞர், கடந்த 20 வருடங்களாக நாச்சிபாளையத்தில் தங்கி வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக, 6 மாதங்களாக மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த சில தினங்களாக நாச்சிபாளையம் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த இளைஞர் நாச்சிப்பாளையத்தில் உள்ள கோபாலகிருஷ்ணன் நடத்தி வரும் பேக்கரிக்குச் சென்றுள்ளார். அப்போது கோபாலகிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, அந்த இளைஞர் பேக்கரியில் இருந்த கத்தியை எடுத்து கோபாலகிருஷ்ணனின் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கோபாலகிருஷ்ணனுக்கு ரத்தம் அதிகம் வெளியேறியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் உதவியுடன் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, அந்த இளைஞரை பிடித்த பொதுமக்கள், கை, கால்களை கட்டி போட்டுவிட்டு அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில், அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.
பின்னர் அந்த இளைஞரை வீட்டிற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், பெற்றோரிடம் எச்சரிக்கை செய்து ஒப்படைத்தனர். மீண்டும் மனநல காப்பகத்திற்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்து காப்பகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கூடலூரில் யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு! - Elderly Man Killed By Elephant