திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரியில் கடந்த 1993ஆம் ஆண்டு சிவஞானம் என்பவர் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அந்த இடத்துக்கு அருகில் நாகராஜன் என்பவர் ஒரு ஏக்கர் இடத்தை வாங்கியதாகவும், அது பின்னாளில் பிரபாகர், பிரேமா என்பவரிடம் கை மாறியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சிவஞானம் என்பவர் வாங்கிய நிலத்துக்கு பிரபாகர், பிரேமா ஆகியோர் உரிமை கொண்டாடுவதாக நிலத்தின் உரிமையாளர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தின் உரிமையாளர் சிவஞானம் தான் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ நல்லதம்பி தலையீட்டுக்குப் பிறகு, திடீரென இந்த நிலம் பிரபாகர், பிரேமாவுக்குச் சொந்தம் என மாவட்ட நிர்வாகமும், ஆர்டிஓ அதிகாரியும் சான்று அளித்திருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிஜிபி அலுவலகத்தில் சிவஞானத்தின் மகன் கண்ணன் அளித்துள்ள புகாரில், "ஏலகிரியில் எங்கள் அப்பா வாங்கிய ஒரு ஏக்கர் நிலம் பிரபாகர், பிரேமா என்பவருக்குச் சொந்தமானது என்பது போல் பட்டாவை மாற்றி அமைக்குமாறு திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ நல்லதம்பி வற்புறுத்துகிறார்" என கண்ணன் புகார் அளித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் கேட்க ஈடிவி பாரத், சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பியை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்தால் அதனை வெளியிட ஈடிவி பாரத் தயாராக உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : நில அபகரிப்பு மனு; திருப்பத்தூர் திமுக எம்எல்ஏவை எதிர்மனுதாரராக சேர்க்க அறிவுறுத்தல்!