சென்னை: சென்னை காளிகாம்பாள் கோயில் அர்ச்சகராக இருந்து வந்தவர் கார்த்திக் முனுசாமி. இவர் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளினியை கோவில் தீர்த்தத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசாரால் கடந்த மே 28ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, கார்த்திக் முனுசாமி ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 18ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் கார்த்திக் முனுசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, அவர் சிறைக்குள் இருந்து வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட தொகுப்பாளினி மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த விவகாரம் தொடர்பாக புதிய புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், “நான் கொடுத்த புகாரை சரிவர விசாரணை செய்ய வேண்டும் என்றும், மேலும் புகாரில் குறிப்பிட்டுள்ள பக்தவச்சலம், அருணாச்சலம், காளிதாஸ், ஸ்வேதா, சத்யராஜ், பிரி ஆகியோரை தீவிரமாக விசாரித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் பாதிக்கப்பட்ட பெண் தொகுப்பாளினி ஆஜரானார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி ஜாமீனில் வந்து விட்டார். விசாரணை முறையாக நடைபெறவில்லை. இதனால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளேன். தலைமை அர்ச்சகர் காளிதாஸ் அரசியல் செல்வாக்கோடு இருப்பதால் போலீசார் அவர் மீது வழக்கு பதியவில்லை. நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது'' என்றார்.
மேலும், 'தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறிய அவர், கார்த்திக் முனுசாமியின் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளோம் என்றும், எனக்கு பணம் கொடுத்து விட்டதாக தலைமை அர்ச்சகர் காளிதாஸ் வதந்தியை பரப்புகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
அத்துடன், ''காளிதாஸை இதுவரை போலீஸ் கைது செய்யவில்லை. நீதிக்காக உச்ச நீதிமன்றத்தை நாடுகிறேன். எனக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை காளிதாஸ் மிரட்டுகிறார். எனக்கு கார்த்திக் முனுசாமி தாலி காட்டியுள்ளார். கார்த்திக் முனுசாமி நண்பர் தான் என்னை பாலியல் தொழிலில் தள்ள முயன்றார். கார்த்திக் முனுசாமி எனக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும்'' என்று பாதிக்கப்பட்ட பெண் தொகுப்பாளினி' செய்தியாளர்கள் சந்திப்பின்போது இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க: மனைவியை 17 இடங்களில் குத்திய கணவர்.. திருப்பத்தூரில் பரபரப்பு!