சென்னை: சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் ஒருவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், "சென்னை மண்ணடி பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி என்பவர், அந்த கோயிலுக்கு நான் சென்றபோது என்னுடன் நட்பாக பழகி, என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடி செய்துவிட்டார்" என்று புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நம்பிக்கை மோசடி, பெண்ணை மானபங்கம்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், தனிப்படை அமைத்து கார்த்திக் முனுசாமியை தீவிரமாகத் தேடிவருவதோடு, காளிகாம்பாள் கோயிலின் தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உட்பட ஐந்து நபர்களிடம் சம்மன் அனுப்பி காவல் நிலையம் வரவழைத்து நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுமட்டும் அல்லாது, அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் தொகுப்பாளர் சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் நேற்று (மே 27) விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அந்த பெண் தொகுப்பாளர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "நான் புகார் கொடுத்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் கார்த்திக் முனுசாமி, காளிதாஸ் என ஒருவரையும் கைது செய்யவில்லை. ஆகவே, இந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்.
மேலும், கோயிலுக்கு வரும் பெரிய புள்ளி ஒருவரின் உதவியோடுதான் கார்த்திக் தலைமறைவாக இருந்து வருகிறார். விவகாரத்து பெற்றுள்ளதாகக் கூறி திருமணத்தை மறைத்து தனது வாழ்க்கையை சீரழித்த அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரு பெண் கருக்கலைப்பிற்கு எப்படி சம்மதிப்பார்கள்? என்னிடம் ஆசை வார்த்தை கூறி, தெரிந்த மருத்துவர் எனக்கூறி எனக்கு கருக்கலைப்பு செய்ய வைத்தனர். அதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது.
இதுமட்டுமல்லாது, புகார் கொடுத்தபின்பு கார்த்திக் முனுசாமி தரப்பினர் பலரும் என்னை மிரட்டி வருகின்றனர். பணத்தை வாங்கிக் கொள்ளும்படி பேரம் பேசுகின்றனர். தவறு செய்த அவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். ஆனால், நான் தினமும் பயந்து வாழவேண்டியதாக உள்ளது" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: கோவில் பூசாரி மீதான பாலியல் வழக்கு; விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு! - Transfer Investigation To CBCID