கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது வெண்ணமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் திருப்பணிகள் காரணமாகத் தைப்பூசத் தேரோட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இதனிடையே கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்று, மகா கும்பாபிஷேக விழா இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று(ஏப்.21) மங்கள இசை, விநாயகர் வழிபாடு, 4ம் கால யாக பூஜை, ஹோமம், தீபாராதனை உள்ளிட்டவைகள் நடைபெற்றது. பின்னர், 5ம் கால யாகப் பூஜை நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று(ஏப்.22) அனைத்து மூல மூர்த்திகளின் விமானங்கள் மற்றும் ராஜ கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட அனைத்துப் பரிவார மூலமூர்த்திகளுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கரூர், காதப்பாறை, ஆத்தூர், மண்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஹேமலதா, கரூர் வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி மகா கும்பாபிஷேக விழா தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
முன்னதாக, பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 16ஆம் தேதி கிராம சாந்தியும், 17,18 ஆகிய தேதிகளில் மங்கள இசை, விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரசாதம் வழங்கல் ஆகியவையும், 19ஆம் தேதி அக்னி சங்கிரஹணம், முளைப்பாரி அழைத்தல், அஷ்டபந்தனம் சாற்றுதல் ஆகியவையும், 20ஆம் தேதி 2ம் கால யாகப் பூஜையும், ஹோமமும் நடைபெற்று கோபுரக் கலசங்களும் வைக்கப்பட்டன. தொடர்ந்து 3ம் கால யாகப் பூஜையும் நடைபெற்று பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: 'பிரதமர் வீடு' ஆசை காட்டி பாஜக நிர்வாகி பல கோடி மோசடி? - கோவை ஆட்சியரிடம் பெண்கள் புகார்! - Coimbatore PM AWAS YOJANA SCAM