வேலூர்: வேலூர் நறுவீ மருத்துவமனையும், அடையாறு ஆனந்த பவன் குழுமமும் இணைந்து, இருதய நோய் பாதிப்பு உள்ள 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 10 சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத் மற்றும் அடையாறு ஆனந்த பவன் குழும நிர்வாக இயக்குனர் கே.டி.சீனிவாச ராஜா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்கள், "வேலூரில் இயங்கி வரும் நறுவீ மருத்துவமனையில், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் குணமடைந்த நோயாளிகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் பணியும் இம்மருத்துவமனையின் மூலம் நடைபெற்று வருகிறது.
இலவச இருதய சிகிச்சை: பல்வேறு சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளுடன் இயங்கி வரும் வேலூர் நறுவீ மருத்துவமனையும், அடையாறு ஆனந்த பவன் குழுமமும் இணைந்து இருதய நோயால் பாதிக்கப்பட்ட 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
பெரு நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு திட்டத்தின் கீழ், இந்த அறுவை சிகிச்சைக்கான முழு செலவினையும் அடையாறு ஆனந்த பவன் குழுமம் ஏற்றுக்கொள்கிறது. தற்போது இதற்காக ரூ.40 லட்சம் ஒதுக்கியுள்ளனர். இந்த வாய்ப்பை பெற விரும்பும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இதற்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ், இருதய நோய் பாதிப்புக்கான முந்தைய சிசிக்சை விவரங்களுடன் நறுவீ மருத்துவமனையை அணுக வேண்டும். பாதிப்புக்கு உட்பட்ட சிறுவர்களை இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் விநாயக் சுக்லா தலைமையில் டாக்டர் ரே ஜார்ஜ், டாக்டர் ஈஸ்வர கார்த்திக், டாக்டர் ஜாபர், ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் ஆய்வு பரிசோதனை செய்து இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்வர்.
இதில், குறிப்பாக இருதய நோய் பாதிப்பு அதிகமாக உள்ள சிறுவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த வாய்ப்பைப் பெற நறுவீ மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் பால் செல்வம் என்பவரது கைப்பேசி எண்: 8754047796 தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கவும்" எனத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் மருத்துவமனை துணை தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், பொது மேலாளர் நிதின் சம்பத், அபிராமி நிதின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்