வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்புராயநல்லூர், இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் டெங்கு மற்றும் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் சுந்தரி என்பவர் கூறுகையில், “கடந்த ஏழு நாட்களாக இந்த பகுதியில் இருக்கும் இளைஞர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் இந்த சுகாதாரச் சீர்கேட்டின் காரணமாக கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் வசித்து வந்த சஞ்சய் என்ற சிறுவன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், ஒரு இளைஞர் டெங்குவினால் பாதிக்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து வருகிறார்” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பூங்கொடி, “எங்கள் பகுதியில், பலர் வைரஸ் காய்ச்சல் மற்றும் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் தெருவில் வரும் தண்ணீரின் நிறமே சரியில்லை, இந்த நோய் பாதிப்பிற்கு அஞ்சி எங்களின் பச்சிளம் குழந்தையை உறவினர் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறோம்” என்றார்.
மேலும் பேசிய அம்சவேணி, “இதுகுறித்து நாங்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் புகார் வைத்தோம், ஆனால், அவ்வப்போது மட்டும் தூய்மைப் பணியாளர் வந்து மருந்து அடித்துவிட்டு செல்வார்கள். எங்கள் தெருவில் இருக்கும் 50 குடும்பத்தில் இருக்கும் ஒருவொருக்கும் காய்ச்சல் உள்ளது. எனவே, இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, எங்கள் தெருவில் இருக்கும் சுகாதாரமற்ற நிலையைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: திருப்பத்தூர் பகுதிகளில் திடீரென ஆடுகள் உயிரிழப்பு.. சிறுத்தை நடமாட்டமா என மக்கள் அச்சம்!