வேலூர்: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் அலட்சியம் காட்டியதாக குற்றஞ்சாட்டி, வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா நேற்று (மார்ச் 1) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொதுத்தேர்வு துவங்குவதற்கு முன்பே, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்படுவது முதல் முறை ஆகும்.
தமிழகத்தில் நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு வரும் 22ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த தேர்வைத் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தம் 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பேர் எழுத உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றுபவர் நேசபிரபா. இவர், நேற்று நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் வினாத்தாள்களை பெற்று வராமல் அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவை பணியிடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அருள்ஒளி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து மாவட்ட அளவில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தேர்வு பணிகளை மிகச் சரியாக செய்ய வேண்டும், எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும், எந்தவித முறைகேடுகளுக்கும் உடந்தையாக இருக்கக்கூடாது.
அப்படி முறைகேடு இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதையும் மீறி நேசபிரபா முறையாக தேர்வு பணிகளில் ஈடுபடாததால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தனர்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கிய நாளில் கல்வித்துறை அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட சம்பவம் கல்வித்துறை அதிகாரிகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல் 2024; தொகுதிப் பங்கீடு குறித்து திமுக - மனித நேய மக்கள் கட்சி நாளை பேச்சுவார்த்தை!