வேலூர்: வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில், காவல்துறையினர், சிறப்புக் காவல் படையினர் மற்றும் ஊர்காவல் படை பிரிவினர் ஆகியோருக்கான தபால் வாக்குகள் செலுத்தும் பணி இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சுப்புலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தலுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணிகள் தற்போது நடைபெறத் துவங்கியுள்ளது.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1500 வாக்குச்சாவடிகளில், பணியாற்றக்கூடிய 6,300 அரசு ஊழியர்கள் மற்றும் 1500 காவல்துறையினர், 250 தேர்தல் நுண் பார்வையாளர்கள் இந்த தேர்தல் பணியில் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் 50% மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளதால், வேலூர் மாவட்டத்தில் 240 பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடி மையங்கள் உள்பட 750 வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் விதிகளை மீறி எடுத்துச் சென்ற ரூ.98 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும் 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. வேலூர் மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் 15 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.
அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்குச் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாக்களிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் போக்குவரத்து வசதிகள் இருக்கின்றது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "கோவை மாப்பிள்ளைக்கு ஓட்டு போடுங்க" - திமுக வேட்பாளர் பத்திரிக்கை அடித்து நூதன பிரச்சாரம்! - Lok Sabha Election 2024