வேலூர்: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக கட்சியும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றது.
அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று(ஏப்.2) வேலூர், நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தேர்தல் வந்துவிட்டதால், தமிழ்நாட்டிற்குச் சில 'பார்ட்-டைம்' அரசியல்வாதிகள் வருகிறார்கள். யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கே தெரியும். யார்? பிரதமர் மோடி. பொய்களையும், அவதூறுகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தேர்தல் சீசனிற்கு மட்டும் வருவார்.
வெள்ளம் வந்தால் வர மாட்டார். நிதி கேட்டால் கொடுக்க மாட்டார். சிறப்புத் திட்டம் கேட்டால் செய்ய மாட்டார். இப்படி, மக்களை ஏமாற்றி தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்து தராமல், துரோகம் செய்த பார்ட்-டைம் அரசியல்வாதிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் தமிழ்நாட்டுப் பக்கமே வரமாட்டார்கள்.
உங்களிடம் நான் கேட்கும் வாக்கு ஜெகத்ரட்சகனுக்கும், கதிர் ஆனந்த்துக்கும் மட்டுமல்ல. இந்த நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்கக் கூடாது. ஜனநாயகம் கேள்விக்குறியாக மாறிவிடக் கூடாது. சமூகநீதி காற்றில் பறக்கக் கூடாது. மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் அறவே கூடாது என்பதற்காகத் தான் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.
இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொருவரின் வாக்கும் தமிழ்நாட்டை மேலும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். தமிழ்நாட்டை வெறுக்கும் பிரதமர் மோடிக்குப் பதிலாக இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமர் ஆகப்போகிறவர், நிச்சயமாக இந்திய ஜனநாயகத்தின் மேல் உண்மையான மதிப்பும், இந்திய மக்கள்மேல் உண்மையான பாசமும், அரசியல் சட்டத்தை மதிக்கும் பண்பும், ஏன், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, பெரும் துணையாக இருப்பவராக இருப்பார்.
நம்முடைய திராவிட அரசைப் பொறுத்தவரை, 'எல்லோருக்கு எல்லாம்' அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலான சீரான வளர்ச்சி என்ற அடிப்படையில்தான் செயல்பட்டு வருகிறது. நாம் செய்துள்ள சாதனைகள், பத்தாண்டுக் கால அதிமுக அவல ஆட்சியின் இருளை அகற்றி, தமிழ்நாட்டிற்கு விடியலை ஏற்படுத்தியிருக்கிறது என்று பேசினார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி கொலை வழக்கில் கைதான 8 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு! முழுவிபரம் என்ன? - 8 PERSON ARRESTED Goondas Act