சென்னை: தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை சார்பில், மாநில சிறுபான்மையினர் நல தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது, “சனாதனத்திற்கு மாற்று பௌத்தம் தான். திராவிடம் என்ற சொல்லை, பெரியாருக்கு முன் முதலில் உயர்த்தி பிடித்தவர் அயோத்திதாசர் பண்டிதர்தான். சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பவர்களுக்கு இடையே அதை எதிர்கொள்ள பௌத்தமே சிறந்த வழி.
பௌத்தம்தழைத்தோங்கினால்தான் அமைதி, சமத்துவம் வளரும். பௌத்தம், சமத்துவத்தை மலரச்செய்யும் என்பதால் தான் அம்பேத்கர் அதில் இணைந்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் தான் பவுத்தம் என்றார்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது, “பௌத்தர்கள், சிறுபான்மையினர் என ஏற்று, பௌத்தர் ஒருவரை மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினராக முதல்வர் நியமித்துள்ளார். பௌத்தர்கலின் புனித பயணத்திற்கான செலவை அரசு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்வேன். இதேபோன்று இலவச பஸ் பாஸ், இதர சலுகைகளை புத்த பிட்சுகளுக்கு வழங்கவும் முயற்சிகளை மேற்கொள்வேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.