கோயம்புத்தூர்: கோவை மாவட்ட ஆதிதிராவிடர் துறை சார்பில், ஆதிதிராவிடர் மக்களுக்கான வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்து, விசாரணை முடிந்த பிறகும் பட்டா வழங்காமல் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மண்டல செயலாளர் சுசி.கலையரசன் கோவணம் கட்டி கொண்டும், திருவோடு ஏந்தியும் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
இவருடன் சுமார் 10க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் கோவையில் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளையும், போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் முன்வைத்தனர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்ட விசிகவினரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சுசி.கலையரசன், "விசிக சார்பில், ஏழை மக்களுக்கு, தினக்கூலி வேலை செய்யும், வாழ்விடமே இல்லாத மக்களுக்கு, சொந்த வீடு இல்லாத மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக விண்ணப்பம் கொடுத்து வருகின்றோம். கடந்த 2022ல் ஆட்சியராக சமீரன் இருந்த போது, நாங்கள் அளித்த விண்ணப்பத்தின் மீது விசாரணை மேற்கொண்டு, தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும் என விசாரணை அறிக்கை கொடுத்திருந்தார்.
அறிக்கை 2022ல் அளிக்கப்பட்டது, ஆனால் தற்போது 2024ஆம் ஆண்டு துவங்கிவிட்டது. அதற்காக வாரம் வாரம் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரை நான் பார்க்காத நாளே கிடையாது. அதே போன்று, தனி வட்டாச்சியர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரிடமுமே கோரிக்கை வைத்தும் செவி சாய்க்கவில்லை. விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவதிலே முறைக்கேடு நடக்கிறது.
மேலும் லஞ்சம் பெற்றுக் கொண்டு, இடைத்தரகர்கள் மூலமாக யாருக்கு அவர்கள் சொல்கிறார்களோ அவர்களுக்கே, வீட்டுமனைகள் வழங்கப்படுகிறது. இந்த திராவிட மாடல் ஆட்சி வந்ததில் இருந்தே, குறிப்பிட்டு சொல்லி வருகிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த விதவித கெட்ட பேரும் வந்துவிடக் கூடாது என பொறுமையாக இருந்தோம். ஆனால் இந்த அதிகாரிகள் மிகவும் மெத்தனப்போக்குடன் நடந்து கொள்கிறார்கள்.
ரகசியமாக பட்டா கொடுப்பது ஏன்?. மூப்பின் அடிப்படையில் பட்டா வழங்கப்படுவதாக கூறுகின்றனர். ஆனால் தற்போது பட்டா வழங்குவது அதன்படி இல்லை. ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் உள்ள அனைவருமே, 50 ஆயிரம், 1 லட்சம் என லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் உள்ளனர். தினக்கூலி வேலை செய்பவர்கள் இதனை எப்படி கொடுப்பார்கள். பட்டா வழங்குவதாக அறிவித்து 3 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் தரவில்லை. அப்படியானால் யாரிடம் இருந்து கையூட்டு வாங்கி விட்டு தாமதம் செய்கின்றனர்.
இந்த போராட்டம் கடந்த 15 நாட்களுக்கு முன்பாகவே நடத்துவதாக இருந்தது. ஆனால் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் காரணமாக, நிறுத்தி வைத்திருந்தேன். அதன்பிறகு எந்தவித பதிலும் இல்லை. எனவே தான், தற்போது இந்த போராட்டம் நடக்கிறது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையினர் அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம். மாவட்ட ஆட்சியரிடம் செயல்பாடுகள் ஒன்றுமே இல்லை; ஆட்சியர் உறங்கிக் கொண்டிருக்கிறார். மாவட்ட வருவாய் அலுவலர் தங்களை பார்ப்பதையே சங்கடமாக நினைக்கிறார். நாங்கள் சென்றால் அவர் எழுந்து சென்று விடுகிறார்.
இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த போராட்டம் மெத்தனமாக செயல்படும் அரசு அதிகாரிகளை கண்டித்து நடத்தப்படுவது என்றும், கூட்டணிக்கும் போராட்டத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்தார். இதன் காரணமாகவே கோவணம் கட்டி, திருவோடு ஏந்தி இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்" எனத் தெரிவித்தார்.