திருச்சி: கும்பகோணத்தில் நடைபெற உள்ள விசிக நிர்வாகி திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மத்திய அரசு ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை நிறைவேற்ற பார்க்கிறார்கள். மோடி அரசை யாரும் கேள்வி எழுப்பக்கூடாது. அமெரிக்காவில் இருப்பதைப் போன்ற அதிபர் அரசியலை இங்கு கொண்டு வர வேண்டும் என்று பாஜக விரும்புகிறார்கள்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தால் கூட்டணி கட்சிகள் இல்லாமல் ஆட்சி அமைக்கலாம். எதிர்க்கட்சிகள் யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படி ஒரு நிலையை தான் கொண்டுவர பார்க்கிறார்கள். இது ஜனநாயகத்தின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. பொருளாதார விரயத்தையும், நேர விரயத்தையும் கட்டுப்படுத்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையை கொண்டு வருகிறோம் என்று அப்பட்டமான பொய் கூறுகிறார்கள்.
அம்பேத்கரை பாராட்டி பேசி கொண்டே மறுபுறம் அரசியலமைப்புச் சட்டம் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை பாஜக அரசு நடத்தி வருகிறது. இவர்கள் ஏற்கனவே 375ஆவது சட்டத்தைக் கொண்டு வந்து அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தினார்கள். முன்னேறிய வகுப்புகளில் இருக்கும் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தார்கள்.
இதையும் படிங்க: தாமிரபரணி ஆற்றில் உடைந்த 33 உறை கிணறுகள்.. 5 மாவட்டங்களுக்கு தடைபட்ட குடிநீர் விநியோகம்..! - THAMIRABARANI RIVER WELL DAMAGES
தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ள நிவாரணம் மற்றும் இயற்கை சீற்ற பாதிப்புகளுக்கு தமிழகத்திற்கு தேவையான உரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிதி உதவி வழங்க வேண்டும் என விசிக சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
அரசாங்கத்திற்கு எதிராக ஏதேனும் மாற்றுக் கருத்து கூறினால் குறைவான உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளை அனுமதிப்பதில்லை. ஆனால் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அம்பேத்கருக்கு நினைவிடம் அமைத்து பெருமைப்படுத்தினாலும் இன்னொரு புறம் அவருடைய சிந்தனையை முழுமையாக சிதைக்கும் வகையில் பாஜக செயல்படுவது அவர்களது நடவடிக்கையில் தெரிகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்கும் வகையில் வெளிப்படையாக செயல்படுகின்றனர். இது நிதர்சனமான உண்மையாகும். இதை சுட்டிக்காட்ட முயன்ற போது நாடாளுமன்றத்தில் என் ஒலி வாங்கி அனைக்கப்பட்டது.
அரசியலுக்காக தான் கூட்டணி கட்சிகளை திமுக பயன்படுத்துகிறது என்ற விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தை 13 பேர் கொண்ட நீதிபதிகளை உள்ளடக்கிய பெஞ்ச் திருத்தம் செய்யலாம் என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. ஆனால் அதன் அடிப்படை கூறுகளில் கை வைக்க கூடாது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் உள்ளது. பா.ஜ க அரசு இன்று தேர்தல் ஆணையத்தையே கேள்விக்குள்ளாக்கி அதன் அதிகாரத்தையே பறிக்கிறார்கள்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காதது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துவிட்டேன். என்னை யாரும் அழுத்தம் கொடுத்து, அதற்கு என்னால் இணங்க முடியாது. சில நேரங்களில் முதல்வரை பார்க்க முடியாத தருணங்களில் மற்ற அமைச்சர்களை பார்த்து பேசுவது உண்டு அதைபோல்தான் அமைச்சர் எ.வ. வேலுவை நான் சந்தித்தேன்.
இதற்கும் ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதிற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் ஆதவ் அர்ஜுனா இதையும் சர்ச்சையாக மாற்றுகிறார். அவர் கட்சியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் சூழலில் இதுபோன்ற முரண்பாடான கருத்தை கூறுவது தவறு. அவர் அப்படி பேசக்கூடாது. ஆறு மாதத்திற்குப் பின்பு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால் அவர் அமைதியாக இருந்திருப்பார். ஆனால் அவருக்கு வேறு ஒரு செயல் திட்டம் இருப்பதால்தான் இதுபோன்ற கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார். இதை எங்களால் தற்போதுதான் உணர முடிகிறது. எங்கள் கட்சி நடைமுறையின் அடிப்படையில் தான் அவர் நீக்கப்பட்டுள்ளார்” என்று திருமாவளவன் கூறினார்.