சென்னை: தாம்பரத்தில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், விடுதலைச் சிறுத்தை கட்சியில் இணையும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், கட்சியில் சேரும் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து, கட்சியில் இணைத்தார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்து சாக்கடையில் வீசி இருக்கிறார்கள். இது மிகுந்த துயரத்தை அளிக்கிறது. இந்த வழக்கில் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.
போதைப் பழக்கம் அவர்களை இது போன்ற செயல்களில் ஈடுபட வைத்திருப்பதாக காவல்துறை விசாரணையில் உறுதி படுத்தியுள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அதானியின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் மூலம் போதைப்பொருட்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது ஊடகங்கள் ஆதாரப்பூர்வமாக கூறியுள்ளது.
இந்த புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே பல எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். நானும் ஒரு விவாதத்தில் போதைப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக தகவல்கள் வருவதை சுட்டிக்காட்டிக் கண்டித்து பேசி இருக்கிறேன். மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் இணைந்து இந்த போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பீகாரில் நடந்த ஆர்ஜேடி கட்சி சார்பில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் மக்களின் பங்கேற்பு இந்திய அரசியல் வட்டாரத்தையே அதிர வைத்திருக்கிறது. இது மக்கள் மத்தியில் இந்தியா கூட்டணி எந்த அளவிற்கு அங்கீரத்தை பெற்றுள்ளது என்பதை காட்டுகிறது. இந்த நிகழ்ச்சி பாஜக தலைமையிலான கூட்டணிகளை அச்சப்படவைத்திருப்பதாக நம்புகிறோம்" என்று கூறினார்.
தொடர்ந்து திமுக உடனான கூட்டணி குறித்து பேசிய அவர், "விசிக - திமுக இடையேயான ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே போடப்பட்டுள்ளது. எத்தனை தொகுதிகள் என்பது குறித்த முடிவு எடுப்பதற்கு திமுகவிற்கும், விசிகவிற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும், முதல் கட்ட பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ளது.
அடுத்தகட்ட பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்த போது எம்மால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் எங்கள் கூட்டணியில் விரிசில் ஏற்படவில்லை என்பதை விளக்கியுள்ளோம். விரைவில் கூட்டணி குறித்த அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடக்கும். சுமுகமான முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "ஆர்எஸ்எஸ் ரவி என்றழைக்கப்படும், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அண்மையில் கால்டுவெல் படிக்காதவர் என்றும், அவரால் எப்படி திராவிட ஒப்பிலக்கண நூல் எழுத முடியும் என கேள்வியுள்ளார். இது ஆர்.என்.ரவியின் அதிகாரத்தின் விளைச்சளான ஆணவம். மொழி அறிஞர் கால்டுவெல் குறித்து ஆளுநர் பேசியதை வண்மையாக கண்டிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சனாதன விவகாரம்: உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா தகுதி நீக்கத்திற்கு அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்!