சேலம்: சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அடுத்த தும்பல் பட்டியைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் கட்டட தொழில் செய்து வருகிறார். இவரது தாத்தா தான செட்டில்மெண்ட் மூலம் விவசாய நிலத்தை அரவிந்துக்கு எழுதி வைத்தார். அந்த நிலத்தை அரவிந்த் மற்றும் அவரது அண்ணன் அஜித்குமார் ஆகிய இருவரும் பெயர் மாற்றம் செய்து பட்டா பெறுவதாக முடிவு செய்தனர். இதற்கான சான்றிதழ் பெறுவதற்கு தும்பல் பட்டி கிராம நிர்வாக அதிகாரியான பாலாம்மாள் என்பவரிடம் விண்ணப்பித்தனர்.
இதனையடுத்து, பெயரை மாற்றி சான்றிதழ் கொடுக்க வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கிராம நிர்வாக அதிகாரி கூறியதாக சொல்லப்படுகிறது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு 15 ஆயிரம் ரூபாயாக குறைத்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத அரவிந்த் சேலம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரியிடம் அரவிந்த் பணத்தை எங்கு கொண்டு வர வேண்டும் என கேட்டதாகவும், அலுவலகத்திற்கு வந்து தனது கார் டிரைவரிடம் பணத்தைத் தருமாறு விஏஓ பாலம்மாள் கூறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, அரவிந்த் பணத்துடன் விஏஓ அலுவலகம் சென்ற போது, அங்கு ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் ரவிக்குமார், நரேந்திரன், ரவிச்சந்திரன் உள்பட லஞ்ச ஒழிப்பு போலீசார், தும்பல் பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தைச் சுற்றிலும் லுங்கி அணிந்த நிலையில் சாதாரண கூலித் தொழிலாளர்கள் போல் தலையில் துண்டு வேட்டியை கட்டிக்கொண்டு மாறுவேடத்தில் காத்திருந்தனர்.
ஆனால், கிராம நிர்வாக அதிகாரியான பாலாம்மாள் அலுவலகத்திற்கு வராமல் அலுவலகம் அருகில் உள்ள மரத்தடிக்கு வருமாறு செல்போனில் தெரிவித்ததையடுத்து, அங்கு அரவிந்த் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அப்போது லஞ்சப்பணம் 15 ஆயிரம் ரூபாயை பாலாம்மாளிடம் கொடுத்த போது அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கைப்பையில் மேலும் 18 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை விஏஓ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய பெண்கள் கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த லஞ்சம் வாங்கும் செயலுக்கு உடந்தையாக இருந்ததாக விஏஓ பாலம்மாளின் கார் ஓட்டுநர் காமராஜர் என்பவரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: சூட்கேஸில் கட்டுக்கட்டாக ரூ.1.11 கோடி.. சென்னையில் சிக்கிய கடத்தல் குருவிகள் - திடுக்கிடும் பின்னணி