சென்னை: தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (டிச.9) மற்றும் நாளை (டிச.10) என இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் முதல் நாளான இன்று கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி குறித்து பல்வேறு கேள்விகள் கேட்டனர். அதற்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதாவது," திமுக அரசு கொண்டு வந்திருக்கக் கூடிய இந்த தனி தீர்மானம், திமுக அரசு தனியாகக் கொண்டு வந்தது கிடையாது. அவர்களின் அலட்சியத்தை மறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானம்.
டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பது தொடர்பாக இடம் தேர்வு செய்வது முதல் அனைத்து விவரங்கள் திமுக அரசுக்கு தெரியும். இத்தனை நாட்கள் அமைதியாக இருந்து விட்டு அப்பகுதியின் உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தியதற்கு பிறகு இப்போது தனி தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசு தமிழகத்தை திட்டமிட்டு பால்படுதுவது போன்று நாடகத்தை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: "டங்ஸ்டன் சுரங்கம் விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டிவிட்டது" - இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு!
மத்திய அரசு புதிதாக சட்டதிட்டம் கொண்டு வரும்போது பாராளுமன்றத்தில் திமுக அரசு எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்டபோது எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது தொடர்பாக மத்திய சுங்கத்துறை சார்பில் எக்ஸ் தளத்தில் தெளிவாகத் தெரிவித்துள்ளது.
தற்போது மத்திய அரசு மீது பழி சுமத்த வேண்டும் என்பதற்காகவே திமுக அரசு நாடகம் செய்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுங்கத்துறை அமைச்சகத்திற்கு பாஜக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.