கோயம்புத்தூர்: கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில்Public Policy Research Centre என்ற அமைப்பு தயாரித்த "லட்சியங்களைக் கைவிட்ட திமுக ஊழல் மற்றும் புறக்கணிப்பின் கதை" என்ற ஆய்வு அறிக்கை இன்று (ஏப்.16) வெளியிடப்பட்டது. இந்த அமைப்பின் தலைவர் சுமித் பஷின் அறிக்கையை வெளியிட, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய வானதி சீனிவாசன், “இந்த அமைப்பு டெல்லி அமைப்பு, இவர்கள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திமுக அரசு எப்படி எல்லாம் அவர்களது புறக்கணிப்பாலும் அலட்சியத்தாலும் மாநிலத்தின் வளர்ச்சியைப் பாதித்துள்ளார்கள் என்று விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.
விவசாயம் பிரதானமாக இருக்கக்கூடிய இப்பகுதியில் எவ்வாறு விவசாயத்தை இந்த மாநில அரசு புறக்கணிக்கிறது எனவும், நீர்வள மேலாண்மையில் மத்திய அரசு வழங்கியுள்ள இடங்களில் மாநில அரசு அந்தப் பணிகளைச் செய்யாமல் விட்டதால் விவசாயத்திற்கான நீர் ஆதாரம் குறைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆன்மீக சுற்றுலாவிற்கு வருகின்ற வருவாய் தான் அதிகமாக இருக்கிறது. பாரம்பரியத்திற்கு மதிப்பு கொடுக்காமல் கோவில்களை இடிப்பது கோவில்களுக்கு எதிராகப் பேசுவது சனாதன தர்மத்தை அழிப்பதாகக் கூறுவது என தமிழகத்தில் இந்து பாரம்பரியத்திற்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இது அவர்களின் சித்தாந்தத்திற்கு எதிராக இருந்தாலும் கூட மக்கள் வாக்களித்து அரசாங்கம் அமைகின்ற போது அந்த அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய அரசாக இருக்க வேண்டும்”, என்றார்.
இங்கே தொழில் துவங்க வேண்டும் என்றால் Business Friendly to the Government என்று இல்லாமல் Business Friendly To the First Family என்பதை திமுக கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக இங்கு முதலீடு செய்து தொழில் துவங்கக் கூடிய நிறுவனங்கள் குறைந்துள்ளார்கள் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி பற்றி திமுக அரசு மற்றும் அதன் கூட்டணியில் இருக்கக்கூடிய கமலஹாசன் எல்லாம் பேசுகிறார், கமலஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டு தான் பேசுகிறாரா அல்லது படத்தில் இடையில் வருகின்ற ஏதோ வசனம் என்று நினைத்துப் பேசுகிறாரா என்று தெரியவில்லை.
ஜிஎஸ்டி இருப்பதால் வரி வசூல் அதிகரித்துள்ளது, ஜிஎஸ்டி பாதிப்பு எந்த மாநிலத்தில் இருந்தாலும் அது முழுக்க முழுக்க மத்திய அரசைச் சாராது, ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் இருப்பார்கள், தமிழகத்தில் ஜிஎஸ்டியில் ஏதேனும் பாதிப்புகள் இருக்கிறது என்றால், அதனை உரிய முறையில் தெரிவித்து மாநில அரசின் சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில தரப்பின் வாதத்தை முன்வைத்து, அதற்கான தீர்வு கொடுக்காமல் புறக்கணித்து இருப்பது மாநில அரசு.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருந்த போது காவிரி நீர் பிரச்சனை இல்லை, தற்போது காங்கிரஸ் வந்ததும் பிரச்சினை துவங்கி விட்டது. மேலும் மாநிலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மாநகராட்சி பள்ளிகளில் பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் இல்லை என்று நானே தெரிவித்துள்ளேன்.
மேலும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் கூறியதை தான், இந்த அறிக்கையும் கூறுகிறது, பாஜக எப்போதும் உண்மைதான் பேசும். இந்த அறிக்கை தேர்தலுக்காக வெளியிடப்படவில்லை, ஒரு வாரத்திற்கு முன்பே இந்த அறிக்கை தயாராகிவிட்டது”, என தெரிவித்தார்.