கோயம்புத்தூர்: கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் முன்பு பா.ஜ.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (புதன்கிழமை) திறந்து வைத்தார். தொடர்ந்து, தேர்தல் நடைமுறை காரணமாக கோவை சட்டமன்ற அலுவலகம் பூட்டப்பட்டு இருக்கும் நிலையில், சட்டமன்ற அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து பொதுமக்களிடம் வானதி சீனிவாசன் மனுக்களைப் பெற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படாமல் இருப்பதால் மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர் என தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கைகள் இல்லை. தேர்தல் முடிந்தும் சட்டமன்ற அலுவலகங்கள் திறக்கப்படாமல் இருப்பதால், மாணவர் சேர்க்கை பரிந்துரைக்கு வரும் பெற்றோர் சிரமத்திற்கு உள்ளாகின்றார்.
தேர்தல் முடிந்த மாநிலங்களில் எம்எல்ஏ அலுவலகம் செயல்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், மத்திய தேர்தல் ஆணையத்திடம் இதை வலியுறுத்த வேண்டும். திமுக அரசு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, குடிநீர் பிரச்சினை ஆகியவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. திமுக குடும்பத்திற்கு எதிராக டிவிட்டர், சமூக வலைத்தளங்களில் பேசுபவர்களை கைது செய்வதில் அக்கறை காட்டுகிறது. மக்கள் பிரச்சினையில் அரசு தீவிரமாக இல்லை. பத்தி சேசாத்ரி, மாரிதாஸ் என தொடர்ச்சியாக பல்வேறு நபர்களை கைது செய்தது.
அதன் தொடர்ச்சியாக, சவுக்கு சங்கரையும் கைது செய்துள்ளது. சவுக்கு சங்கர் எங்களை பண்ணாத விமர்சனம் இல்லை. நான் திமுகவிற்கு போகப் போகின்றேன் என்று கூட சொன்னார். இவற்றை சகித்துக் கொள்ள முடியாமல் அரசு அதிகாரத்தை துஷ்பிரயோபம் செய்கிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. சவுக்கு சங்கர் விவகாரத்தில் கஞ்சா கேஸ் என்னும் பழைய நடைமுறையை திமுக இன்னும் தூக்கிக் கொண்டு இருக்கின்றது.
சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா, இல்லையா? இதில் என்ன உண்மை என தெரியாது. ஆனால், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட போது, மாநில அரசின் மீது சந்தேகம் வந்துள்ளது. சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது உண்மை என்றால், இந்த அரசு கேவலமான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது என அர்த்தம். பெண்களை இழிவுபடுத்தி விட்டதாக கைது செய்யப்பட வேண்டும் என்றால், திமுகவினர் பாதி பேர் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
பெண் காவலர்களை இழிவுபடுத்தி விட்டதாக பொங்குகின்ற அரசு, திமுகவினர் பெண்களை எவ்வளவு கேவலமாகப் பேசி இருக்கின்றனர் என்பதை பார்க்க வேண்டும். ஜெயலலிதா மீதான திமுக விமர்னங்கள் எந்த வகையினைச் சார்ந்தது? திடீரென பெண் காவலர்களாக இந்த அரசு உருமாறிவிட்டது.
பிரஜ்வல் ரேவண்ணா விஷயத்தில் கர்நாடக மகளிர் அணி எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. தேசிய மகளிர் அணி சார்பில் டெல்லியில் இருந்து நானும் கொடுத்திருக்கிறேன். யார் தவறு செய்திருந்தாலும் யார் குற்றம் செய்திருந்தாலும், அதற்கான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும்.
ரேவண்ணா விவகாரத்தில் பா.ஜ.க தலையிடாது. முதலமைச்சர் ஓய்வுக்குச் சென்றாலும் தமிழ்நாடு அரசு ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும் என்பதுதான் எங்களது எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டில் அனைத்து விதமான பொருட்களும் விலை ஏறிவிட்டது. டாஸ்மாக் கடையில் கூட விலை ஏறிவிட்டது” என்றார்.
அப்பொழுது வானதி சீனிவாசனிடம் சட்டமன்ற அலுவலகத்தின் வாசலிலும், அலுவலக வளாகத்திலும் காலி மது பாட்டில்கள் கிடப்பது குறித்த கேள்விக்கு அதிர்ச்சி அடைந்த அவர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறக்காமல் விட்டால் என்னவெல்லாம் நடக்கிறது என பாருங்கள் எனவும், இன்னும் கொஞ்ச நாளில் கஞ்சா விற்கப்படுகிறது என்று சொன்னாலும் சொல்வார்கள் என தெரிவித்தார்