தேனி: வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாய பாசனங்களுக்கு தேவையான நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான வருசநாடு, போடி, கொட்டக்குடி மற்றும் வீரபாண்டி முல்லை பெரியாறு ஆகிய பகுதிகளில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு நாட்களில் மூன்றடிக்கு மேல் உயர்ந்தது.
இதையும் படிங்க: ஐந்து தலைமுறைகளுடன் 106வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி.. திண்டுக்கல் அருகே சுவாரஸ்யம்!
வைகை அணையின் நீர்மட்டம்: வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 63.45 அடியாக உள்ளது. மேலும் வைகை அணைக்கு நீர்வரத்து 2862 கன அடியாக உள்ள நிலையில் நீர் திறப்பு 69 கன அடியாக காணப்படுகின்றது. அணையில் இருப்பு 4896 கன அடியாக இருக்கின்றது.
மக்களுக்கு எச்சரிக்கை: அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால், அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்ட கூடும் என்பதால், ஆற்றுப்பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் சொல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்