திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து நடிகரும், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலருமான வாகை சந்திரசேகர் மற்றும் பன்முக எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி இருவரும் மேலப்பாளையம் பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து, பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அப்போது பிரச்சாரத்தில் பேசிய வாகை சந்திரசேகர், "கடந்த 3 ஆண்டுகளாக ஒரு சிறந்த திராவிட மாடல் ஆட்சியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்து கொண்டு இருக்கிறார். ஆனால், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் மீண்டும் ஆட்சிக்குவர துடிக்கிறார்கள். இனி பாஜக ஆட்சிக்கு வந்தால், ஏதோ ஒரு அரசியல் கட்சி 2 முறை ஆட்சி நடத்தியது, 3வது முறையாகவும் ஆட்சி நடக்கிறது என நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஏனென்றால் இதுதான் இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கக் கூடிய தேர்தல். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது, அப்படி அவர்கள் வந்தால் இனி நாடாளுமன்றத்திற்குத் தேர்தலே நடக்காது. ராணுவ ஆட்சியாக, சர்வாதிகார ஆட்சியாக இருக்கும். நமது சுதந்திரம் முழுமையாகப் பறிக்கப்படும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என்ற அளவிற்குக் கொடுமையான ஒரு முடிவுக்கு வந்தால், இத்தனை ஆண்டு காலம் கல்தோன்றி, மண் தோன்றி முன் தோன்றா மூத்த குடி தமிழுக்கு என்ன மரியாதை. தமிழிலிருந்துதான் அனைத்து மொழியும் பிரிந்தது, அப்படிப்பட்ட தமிழ் மொழியவே அழிக்கத் திட்டமிட்டுக் கொண்டுள்ளனர்.
இப்படி ஒரு பேராபத்து பெரியார், அண்ணா, கலைஞர் காலத்தில் கூட வந்தது இல்லை. ஆனால் இன்று அந்த ஆபத்தைப் பெரியாராக, அண்ணாவாக, கலைஞராக நின்று அதனை முறியடித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். எனவே நாம் 40க்கு 40 வெற்றியைப் பெற்றால்தான் மத்தியில் பாஜக ஆட்சியை அகற்ற முடியும். இந்த பேராபத்திலிருந்து இந்தியாவைக் காக்க, இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்-யை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவர் டெல்லிக்குச் செல்வதன் மூலம், பாஜகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.
அனைத்து மாநிலத்திலும் ஓட்டுப் போடுகிறார்கள் தமிழ்நாட்டில் மட்டும் ஓட்டுப்போடுவதில்லை என்ற கோவத்திலே தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் தரவில்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வேன் எனக் கூறினாரோ?, அத்தனை திட்டங்களையும் தானே முயற்சி செய்து திறம்பட நடத்திக் காட்டியுள்ளார். இம்முறை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை அழிக்கப்பட்டுவிடும், எனவே சிந்தித்து வாக்களியுங்கள்" எனக் கேட்டுக்கொண்டார்.