மதுரை: மோசடி புகாரில் வி3 யூடியூப் சேனல் (V3 ONLINE TV ) உரிமையாளர் விஜயராகவனை, கோவை மத்திய குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை போலீசார், கைது செய்து விசாரணைக்கு அழைத்த நிலையில், திடீரென உடல் நலக்குறைவு என்று கூறியதால், விஜயராகவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்திய விஜயராகவன், பலரிடம் முதலீடு பெற்று ஏமாற்றியதாகவும், தனது நிறுவனம் நேர்மையான நிறுவனம் என்று போலி ஆவணம் தயாரித்ததாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் பேரில், வி3 யூடியூப் சேனல் உரிமையாளர் விஜயராகவனை கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை மதுரைக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில், திடீரென்று நெஞ்சு வலிப்பதாக கூறியதால் விஜயராகவன், மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மதுரை தனியார் மருத்துவமனையில் விஜயராகவன் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து, 200க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். நள்ளிரவில் மருத்துவமனை முன்பு குவிந்தவர்களிடம், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் அனைவரையும் கலைய செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலையில் மருத்துவமனையில் இருந்து விஜயராகவனை விசாரணைக்காக கோவை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை போலீசார் அழைத்துச் சென்றனர்.
கோவை சக்தி ஆனந்தன் நடத்தும் மை வி3 ஆட்ஸ் (MYV3ADS) நிறுவனத்துடன் V3 ONLINE TV நிறுவன உரிமையாளர் விஜயராகவனுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருக்கோவிலூர், விளவங்கோடு இடைத்தேர்தல் எப்போது? - சத்யபிரதா சாகு விளக்கம்!