மயிலாடுதுறை: தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகள் நலன் கருதி, 2024ஆம் ஆண்டின் குறுவை சாகுபடியை கருத்தில் கொண்டு குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டம் என்னும் திட்டத்திற்காக ரூ.78.67 கோடி நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்து அறிவிப்பை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்த திட்டத்தின் மூலம் ரூ.3.85 கோடி செலவில் வேளாண் விரிவாக்க மையங்களும், 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு மானிய விலையாக 2,000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மற்றும் ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 வீதம் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு நெற்பயிர் இயந்திர நடவு பின்னேற்பு என மானியமாக, இதுவரை ரூபாய் 40 கோடி நிதியில் பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உழவன் செயலியில் தமிழில் பெயர் பதிவு செய்தவர்களுக்கு, குறுவை தொகுப்பு திட்டம் பின்னேர்ப்பு மானியம் 4,000 ரூபாய் வழங்கப்படுவது நிராகரிப்பதாக குற்றம் சாட்டி, மயிலாடுதுறை அருகே உள்ளே கொற்கை கிராமத்தைச் சேர்ந்த வசந்த் என்பவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும், இது குறித்து பேசிய விவசாயி வசந்த், “குறுவை தொகுப்பு இயந்திர நடவு பின்னேர்ப்பு மானியமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 4,000 அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத்தைப் பெறுவதற்காக எனது செல்போனில் உழவன் செயலியில் பதிவு செய்த நிலையில் பின்னேர்ப்பு மானியம் கிடைக்கவில்லை என்றும், வேளாண் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது தமிழில் பெயர் பதிவு செய்ததால் மானியம் வர தாமதமாகியுள்ளது எனக் கூறினார்.
தமிழ்நாட்டில் தமிழில் உள்ள உழவன் செயலில் பதிவு செய்த என்னைப் போன்ற பல விவசாயிகளுக்கு பின்னேர்ப்பு மானியம் 4,000 ரூபாய் வழங்காமல் காலம் தாழ்த்துவது வேதனையை ஏற்படுத்துவதாகவும், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக முதலமைச்சர் உடனடியாக இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தி, அனைவருக்கும் காலதாமதம் இல்லாமல் தங்கு தடை இன்றி பின்னேற்பு மானியம் 4,000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என” குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று அந்த மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, உடனடியாக பின்னேர்ப்பு மானியம் 4,000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “ஆளுங்கட்சியும் காப்பாற்றல.. ஆள்பவரும் காப்பாற்றல.. ஆண்டவா நீதான் காப்பாத்தனும்”- தஞ்சையில் கரும்பு விவசாயிகள் போராட்டம்!