சென்னை: தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் எஸ்சி, எஸ்டி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கதிரவன் பல்கலைக்கழக மானியக்குழுவினால் பணியாளர் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிடப்பட்ட வரைவுக்குக் கருத்துகளை அனுப்பி உள்ளார்.
அதில், "பல்கலைக்கழக மானியக்குழு 2023 டிசம்பர் மாதம் 27ஆம் தேதி அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலமாக உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்கான வழிகாட்டுதல்களின் இறுதி அறிக்கையைப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.
நேரடி நியமனங்களில் இட ஒதுக்கீட்டின்படி எஸ்சி 15 சதவீதம், எஸ்டி 7.5 சதவீதம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27 சதவீதம் வழங்கப்படுகிறது. 10 சதவீதம் இடங்களின் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சமூகத்தினருக்கும் மற்ற இடங்கள் பொதுப்பிரிவினருக்கும் வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் குறித்த வரைவில் 17 அத்தியாயங்களில் விளக்கமாகத் தெரிவித்துள்ளனர். இட ஒதுக்கீட்டை நீக்குவதற்கான வழிமுறைகளைப் பல்கலைக்கழக மானிய குழு விவரித்துள்ளது. நேரடி நியமனங்களில் இட ஒதுக்கீட்டிற்கு என்று அறியப்பட்ட, குறியிடப்பட்ட பேராசிரியர் காலி பணியிடங்களுக்கான இட ஒதுக்கீட்டை நீக்குவதற்குத் தடை உள்ளது.
இருந்தாலும் சில அரிதான மற்றும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் குரூப் ஏ போன்ற பதவிகளில் காலியாக இருக்கும் படி அனுமதிக்க இயலாது. எனவே பொது நலன் கருதி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் குறிப்பிட்ட காலி பணி இடத்தை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் சில தகவல்களை அளித்து அந்த காலி பணி இடத்தை வேறு ஒரு வகுப்பினருக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று பல்கலைக்கழக மானிய குழு வழிகாட்டி உள்ளது.
இதில் குரூப் டி அல்லது குரூப் சி போன்ற ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இட ஒதுக்கீட்டு காலி பணியிடங்களை அந்தந்த பல்கலைக்கழகமே அதன் நிர்வாகத்தின் அனுமதி பெற்று மாற்றிக் கொள்ளலாம். குரூப் ஏ மற்றும் குரூப் பி போன்ற இட ஒதுக்கீட்டிற்கு அனுமதி பெற்ற பேராசிரியர் பணியிடங்களை முழுமையாகக் கல்வி அமைச்சகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அந்தந்த பல்கலைக்கழகங்கள் பணியிடத்தை மாற்றிக் கொள்ளலாம்.
பல்கலைக்கழகங்களில் இதுவரை ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை நீக்குவதற்கான வழிகாட்டுதல் இதுவரை உருவாக்கப்படவில்லை. இந்த நிலையில், பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்குப் பல்கலைக்கழக மானிய குழு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
பேராசிரியர்களின் தகுதிகளையும் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்களின் தகுதிகளையும் பல்கலைக்கழகம் மானிய குழு நிர்ணயம் செய்து அளித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களை ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஆட்சி மன்ற குழுவிடமும் ஒப்புதல் பெற்று, பல்கலைக்கழக மானிய குழுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றுகின்றனர்.
பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது தங்களின், Academic Performance Indicators என்று அழைக்கப்படுகின்ற கல்வி செயல்திறன் மதிப்பீடுகளை விண்ணப்பங்களில் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் நேர்முகத் தேர்விற்கு முன்பாக வல்லுநர் குழுவால் சரிபார்க்கப்படும்.
அதில் பல்கலைக்கழக மானியக்குழுவின் தகுதிகள் பெற்ற விண்ணப்பதாரர் மட்டுமே நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார். சில இடங்களில் விண்ணப்பித்தாலும் போதுமான தகுதி இல்லை என நிராகரித்து விடுகின்றனர். பல்கலைக்கழகம் மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி இது போன்று பொருத்தமான விண்ணப்பதாரர்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்ட பணியிடங்களை, அடுத்து வருகின்ற காலி பணியிடங்களுக்கான அறிவிப்பில் பின்னடைவு பணியிடங்கள் என்று அறிவித்து பணியிடங்களை நிரப்புதல் வேண்டும்.
ஆனால் பல்கலைக்கழகங்கள் பின்னடைவு பணியிடங்களைத் தெளிவாக விளம்பரத்தில் குறிப்பிடுவதில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து ஐஐடி, ஐஐஎம் மற்றும் என்ஐடி-களில் சமூகநீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பித்திருந்தும் கூட அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றது.
அதன் நோக்கம், அந்த இடங்களுக்கு இட ஒதுக்கீட்டுப் பிரிவில் இருந்து தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்று கூறி அந்த இடங்களை பொதுப்போட்டி பிரிவுக்குக் கொண்டு சென்று தங்களுக்கு வேண்டியவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எண்ணமாக இருக்கின்றது.
ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியான பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விண்ணப்பித்திருந்தாலும் தகுதியான விண்ணப்பதாரர் இல்லை என்ற பொய்யான ஒரு காரணத்தைக் கூறி பேராசிரியர் பணி இடங்கள் அளிப்பதில்லை. ஓரளவிற்கு மாநில பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பல்கலைக்கழக மானிய குழு தற்பொழுது அறிவித்துள்ள வரைவு அறிக்கையினை பல்கலைக்கழகங்கள் ஏற்றுக் கொண்டால் இனி வரும் காலங்களில் யார் யாரெல்லாம் பதவிக்கு நிதி அளித்தார்களோ அவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு கிடைக்கும். நிதி அளிக்க முடியாதவர்கள், பதவிகளுக்குப் பொருத்தமான விண்ணப்பதாரர்கள் இல்லை என்ற காரணம் கூறி அந்தப் பணியிடத்தை பொதுவான பிரிவினருக்குக் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பை பல்கலைக்கழக மானிய குழு உருவாக்கி அளிக்கின்றது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருப்பூர், திருவள்ளூர் எஸ்.பி உட்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!