சென்னை: மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுப்பதற்கும், மன அழுத்தங்களுக்கு உள்ளாவதை தடுப்பதற்கும், கோச்சிங் நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 16 வயது நிரம்பியவர்கள் அல்லது 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களை மட்டுமே கோச்சிங் சென்டர்களில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது.
இது தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் தேவேந்திரகுமார் சர்மா அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "தனியார் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை எந்தவொரு கொள்கையும், ஒழுங்குமுறையும் இல்லாத நிலையில், நாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற மையங்கள் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது, மாணவர்களிடம் தேவையற்ற மனஅழுத்தம், மாணவர்கள் தற்கொலை மற்றும் பிற விபத்துகளால் விலைமதிப்பற்ற உயிர்கள் இழப்பு போன்றவை ஏற்படுகிறது. மேலும் பல முறைகேடுகள் ஈடுபடுவதாகவும் தெரிய வருகிறது. கல்வியானது பொதுப்பட்டியலில் இருப்பதுடன், 12ஆம் வகுப்பு வரை படித்தவர்களை மட்டுமே தனியார் பயிற்சி மையங்களில் சேர்ப்பதை ஒழுங்குபடுத்துவது சம்பந்தப்பட்ட மாநிலம், யூனியன் பிரதேச அரசாங்கத்தின் அதிகார வரம்பில் உள்ளது.
இந்த பயிற்சி மையங்கள் மாநில, யூனியன் பிரதேச அரசாங்கங்களால் பொருத்தமான சட்டத்தின் மூலம் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதனடிப்படையில் நாட்டில் பயிற்சி மையத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு, பொருத்தமான சட்டக் கட்டமைப்பின் மூலம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் பரிசீலனைக்கு அனுப்பப்படுகின்றன.
உயர்கல்வி சேர்க்கைக்காக பல்வேறு வகையான நுழைவு தேர்வுகள் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன. இதற்காக மாணவர்கள் முன்கூட்டியே பயிற்சிகளை பெறுகின்றனர். தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பல லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்துகின்றனர். இருப்பினும் மன அழுத்தம் காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
குறிப்பாக மருத்துவப் படிப்பு பயிற்சி அளிப்பதில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரம் முக்கிய இடமாக திகழ்கிறது. இந்த நகரத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் சில மாதங்களுக்கு முன்பு 20க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனியார் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்தும் வகையில், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தனியார் பயிற்சி மையங்களில் 12ஆம் வகுப்பு நிலையில் படிக்கும் மாணவர்களை சேர்க்க வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையில் பள்ளி வாரியத் தேர்விற்கு பின்னர் நுழைவுத் தேர்வும் கூறப்பட்டுள்ளது. தேசியத் தேர்வு முகமையால் 13 மொழிகளில் மாணவர்களின் திறனை அறியும் வகையில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. நீட் (NEET), ஜெஇஇ (JEE) போன்றத் தேர்வுகளை எழுதுவதற்கும் தேசிய தேர்வு முகமையால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சில மாநிலங்களில் தனியார் பயிற்சி மையங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அல்லது 16 வயது பூர்த்தி நிரம்பிய மாணவர்களை மட்டுமே தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கப்பட வேண்டும். இதற்கு குறைவான வயதுள்ள மாணவர்களை தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கக்கூடாது. மேலும் மாணவர்களுக்கு மன அழுத்தங்கள் ஏற்படும் வகையில் பாடம் நடத்தக் கூடாது.
அதற்கு ஏற்ப பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டியது அவசியம். மத்திய கல்வி அமைச்சகம், பாடம் நடத்தும் ஆசிரியர்களை நியமிக்கும் போது அவர்கள் எவ்வித குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களாக இருக்கக் கூடாது. அதுபோன்ற ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. மாணவர்களுக்கு பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும். சிசிடிவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.
மன அழுதத்தை போக்கும் வகையில், மன நல ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆலோசனை வழங்க வேண்டும். மாணவர்களிடம் அதிகளவில் கட்டணங்களை வசூல் செய்யக்கூடாது. மாநில அரசு அதிகாரிகள் பயிற்சி மையங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது ரூ.1 லட்சம் அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என மத்திய கல்வி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.