சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக.18) மாலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு, கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதலமைச்சர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “சமூக நீதிக்காக இடைவிடாது குரல் கொடுத்தவர் கருணாநிதி. வரலாற்றில் அழிக்க முடியாத பல சாதனைகளை புரிந்தவர். நாட்டின் தலைசிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர். அவருடைய படைப்புகள் தமிழ் இலக்கியத்தை பலப்படுத்தின.
Attended the commemorative coin release function to mark the birth centenary of legendary leader Kalaignar M Karunanidhi in Chennai today.
— Rajnath Singh (@rajnathsingh) August 18, 2024
Releasing a commemorative coin in Kalaignar’s memory is a tribute to a life dedicated to progress, justice, and the betterment of society.… pic.twitter.com/xpWLXPyW2Y
அவர் ஒரு மாநிலத்தின் அரசியல்வாதி அல்ல. தேசிய அளவிலான தலைவராகவே பார்க்கப்பட்டார். தேசம் முழுவதும் போற்றப்படுபவராக திகழ்ந்தார். திரைத்துறைக்கான அவரது பங்களிப்பு தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவின் பண்பாட்டுத் தளத்தில் அழியாத முத்திரை பதித்துள்ளது. மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர். வேற்றுமையில் ஒற்றுமையை பேணிக் காத்தவர்.
நாட்டின் சமூக நீதி மற்றும் கலாச்சாரத்தில் அடையாளமாக அவர் திகழ்கிறார். தேசத்தின் நலனுக்காக பல கட்சிகளை ஒருங்கிணைத்தவர். துணிச்சல்மிக்க தலைவர். தலைசிறந்த நிர்வாகி. 1960 முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக திமுகவை வளர்த்தவர். கருணாநிதி ஜனநாயக பண்புகள், இந்திய ஜனநாயகத்தின் செயல்பாடுகளில் மிகப்பெரிய தாக்கம் அளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் மத்திய அரசு அமைந்தபோது கருணாநிதியின் ஆதரவு மிகவும் பக்கபலமாக இருந்தது. விளிம்பு நிலை மக்களுக்காக தரமான வாழ்க்கையைக் கொண்டு வந்தார். கூட்டாட்சித் தத்துவத்தை காப்பதில் பெரும் பங்கு வகித்தார். மாநில முதலமைச்சர் தேசியக் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தார். அவரால் நாட்டிற்கே நன்மை ஏற்பட்டது.
1989ஆம் ஆண்டிலேயே மகளிருக்கான சுய உதவிக் குழுக்களை கொண்டுவந்தவர். பாலின சமத்துவம் பேணும் வகையில் மகளிர் சுய உதவித் திட்டத்தை அவர் கொண்டு வந்தார். பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவைப் பேணியவர். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை உருவாக்குவதில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அரசியல் கட்சிகள், கொள்கைகளைக் கடந்து நாட்டின் வளர்ச்சிக்கானதாக நமது திட்டங்கள் இருக்க வேண்டும். கலைஞர் நாணய வெளியீட்டு விழாவுக்கு அழைத்த தமிழக அரசுக்கு நன்றி” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சென்னையில் போக்குவரத்து மாற்றம்! எந்தப் பக்கம்லாம் போகத் தடை தெரியுமா?