கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஆதரித்து பாஜக மகளிர் அணி சார்பில் இன்று (ஏப்ரல் 13) வாகன பிரச்சாரம் மற்றும் மகளிர் பேரணி நடைபெற்றது. பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.
காந்திபுரம் ஜி.பி. சிக்னல் பகுதியில் தொடங்கி சிவானந்தா காலனி வரை சுமார் 2 கி.மீ., தொலைவுக்கு இந்தப் பேரணி நடைபெற்றது. இதில் திறந்த வாகனத்தில் நின்றவாறு கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். இதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "பிரதமர் மோடி மக்கள் சேவையை முன்னெடுத்து மேற்கொள்ளும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைந்துள்ளது.
அதில் பயனடைந்த மகளிர் தற்போது இந்தப் பேரணியில் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர். அவிநாசி தொகுதியில் மகளிர் பயனாளிகளை நேரில் சந்தித்து கருத்து கேட்ட போது, மத்திய அரசின் திட்டங்கள் அவர்களை சென்றடைந்துள்ளதாக கருத்து தெரிவித்தனர்.
மக்களுக்கு சென்றடைய வேண்டிய திட்டங்கள் அனைத்து பயனாளிகளுக்கும் கீழ் மட்டம் வரை சென்று சேர்ந்துள்ளது. திட்டங்கள் மட்டுமல்லாமல், அதற்குத் தேவையான நிதியையும் ஒதுக்கி ஒவ்வொரு மாநிலத்திலும், மாவட்ட அளவிலும் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதா என்பதையும் பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார்.
கோவை மக்களவைத் தொகுதியில் நடத்தப்பட்டுள்ள மகளிர் பேரணி மூலம் மக்களிடம் நல்ல இணைப்பு கிடைத்துள்ளது. இந்த தேர்தலில் அதிகளவில் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்பதால், அண்ணாமலை வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
இதை தொடர்ந்து பாஜக மாநில தலைவரும், கோயம்புத்தூர் பாஜக வேட்பாளருமான அண்ணாமலை பேசுகையில், "தமிழ்நாட்டில் கடந்த 2 நாள்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கோயம்புத்தூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றுள்ள மகளிர் பேரணியில், பிரதமரின் நலத் திட்டங்களில் பயனடைந்த மகளிர் பயனாளிகள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்" என்றார்.
அவரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோயம்புத்தூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், "கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் மகளிரின் ஆதரவு பிரதமர் மோடிக்கும், வேட்பாளர் அண்ணாமலைக்கும் பெருகி வருவதாகவும், இந்த மகளிர் சக்தி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் எதிரொலிக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஸ்வீட்டு எனது சகோதரர் ஸ்டாலினுக்காக..' - மு.க.ஸ்டாலினுக்கு ஸ்வீட் வாங்கிச் சென்ற ராகுல் காந்தி - Rahul Gandhi