காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் சாம்சங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் நிலையில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, சிஐடியு (CITU) தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் இன்று வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் சாம்சங் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி சாம்சங் நிர்வாகம் சார்பில், சட்டவிரோத வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டம் நடத்தும் ஊழியர்களுக்கு ஷோ காஸ் நோட்டீஸும் வழங்கப்பட்டது.
இதன்படி, அடுத்த 4 நாள்களில் வேலைக்கு வரவில்லை என்றால், 7 நாள்களுக்குள் காரணமின்றி நடத்தப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள சாம்சங் நிறுவனத் தரப்பு, வேலைக்கு வர இருப்பவரை தடுத்து நிறுத்தி போராட்டத்திற்கு அழைத்துச் சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பணிக்கு ஊழியர்கள் திரும்பாவிட்டால் அடையாள அட்டை முடக்கப்படும், தீபாவளிப் பரிசு வழங்கப்படாது, போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு போனஸ் தொகை பிடித்தம் செய்து வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தது. மேலும் வேலை செய்தால் மட்டுமே ஊதியம் எனவும் தெரிவித்திருந்தது. இருப்பினும், ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: சாம்சங் ஊழியர்களுக்கு எச்சரிக்கை: அடையாள அட்டை, தீபாவளி போனஸ் கிடைக்காது?
இந்த நிலையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சாம்சங் நிறுவனத்தில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து விரைவாகத் தீர்க்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதன்படி, ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் நடைபெற்று வரும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேர்மறையான உற்பத்தித் துறை சூழலைப் பேணுவதற்கான விரைவான மற்றும் இணக்கமான தீர்மானத்திற்கு தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தை திறம்பட விரைவாக தீர்ப்பதில் மாநில அரசுக்கு உதவ மத்திய அமைச்சகத்தின் முழு ஆதரவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.