சென்னை: நடப்பாண்டிற்கான (2024 -25) சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், நேற்று (ஜூன் 24) பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த நான்காம் நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது, சட்டப்பேரவையில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவிப்புகள்:-
- "வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ரூ.12.24 கோடி மதிப்பீட்டில் 136 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்து தரப்படும்.
- மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு ரூ.84 லட்சம் செலவில் 7 புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
- சொந்த அலுவலக கட்டடங்கள் இல்லாத, பழுதடைந்த நிலையில் உள்ள 33 வருவாய் அலுவலக கட்டடங்கள், அலுவலகங்களுடன் கூடிய குடியிருப்புக் கட்டடங்கள் ரூ.41.25 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்படும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் புதிய அறிவிப்புகள்!#TNAssembly
— KKSSR Ramachandran (@KKSSRR_DMK) June 25, 2024
(1/2) pic.twitter.com/NfWde5p4wQ - புயல், அதி கனமழை, வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்களால் பாதிப்பிற்குள்ளாகும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 3 நிரந்தர பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மையங்கள் ரூ.36 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பிற்குள்ளாகக் கூடிய மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் 2 பல்நோக்கு நிவாரண மையங்கள் கட்டப்படும்.
- பேரிடர்களின் போது பொதுமக்கள், மீனவர்கள், சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க அபாய எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் ஒலி எழுப்பும் ஆயிரம் முன்னெச்சரிக்கை அமைப்புகள் 13.25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
- பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகளுக்காக படகு, மீட்பு வாகனம் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் ரூ.105.36 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
- காட்டுத் தீ தடுப்பு நடவடிக்கைகளுக்காக வனத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் தீ தடுப்பு உபகரணங்கள் ரூ.15 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
- மீனவர்களுக்கும், மீன்வளத்துறை அலுவலர்களுக்கும் பேரிடர் மீட்பு பயிற்சி ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
- தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
- பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைந்துள்ள 121 கிராமங்களில் வசிக்கும் தன்னார்வலர்களுக்கு முதலுதவி, பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணம் தொடர்பான பயிற்சி ரூ.6.5 கோடி மதிப்பில் வழங்கப்படும்.
- சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்களில் உள்ள 500 தன்னார்வலர்களுக்கு, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மூலம் ரூ.2 கோடி ரூபாய் மதிப்பில் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணம் தொடர்பான பயிற்சி அளிக்கப்படும்.
- பருவநிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெப்ப அலையின் தாக்கத்தினை மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும்.
- பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி மாவட்டங்களில் பல வருடங்களாக குடியிருந்து வரும் 854 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளூந்தூரர்பேட்டை வட்டம், உளுந்தூர்பேட்டை நகரம் மற்றும் உ.கீரனூர் வருவாய் கிராமங்களில் சர்க்கார் ஜாகா என வருவாய் கணக்குகளில் பதிவு செய்யப்பட்ட நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு நத்தம் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட பணிகளை மேற்கொண்டு 396 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பட்டா வழங்கப்படும்.
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டம் மேலசீதேவிமங்கலம் கிராமத்தில் நத்தம் என வகைப்படுத்தப்பட்டு நத்தம் நிலவரித்திட்டம் செயல்படுத்தப்படாத புல எண் 104/2A-வில், நத்தம் நில அளவை மற்றும் நிலவரி திட்டம் மேற்கொண்டு 78 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பட்டா வழங்கப்படும்.
- ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வரும் 500 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
- திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் ஊர்க்காடு வருவாய் கிராமத்தில் 1,800 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
- வருவாய் நிலை ஆணை 21-ன் கீழ் பயனாளிகளுக்கு அளிக்கப்படும் வீட்டுமனை ஒப்படை ஆணைகள் இணைய வழியில் வழங்கப்படும்.
- நவீன நில அளவை கருவியைப் பயன்படுத்தி பராமரிப்பு நில அளவை செய்து பொதுமக்களுக்கு பட்டா வழங்கப்படும்.
- பத்திரப்பதிவு துறையில் வழங்கப்படும் வில்லங்கச் சான்றிதழ் போன்று ஒரு புல எண்ணில் குறிப்பிட்ட காலத்தில் இணைய வழியில் நடந்த பட்டா மாற்ற விவரங்களை அறிக்கையாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும்.
- பத்திரப் பதிவின் போது சொத்து விவரங்களை சரிபார்க்க ஏதுவாக, புலப்படத் தரவுகள் பதிவுத்துறைக்கும் பகிரப்படும்.
- பட்டா மாற்றம் மற்றும் புலை எல்லைகளை அளவீடு செய்தல் போன்ற சேவைகளை கண்காணித்து அவற்றின் தரத்தினை பேணும்பொருட்டு தரகட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.
- மதுரை மற்றும் கோவையில் மண்டல அளவிலான நில அளவைப் பயிற்சி மையங்கள் நிறுவப்படும்.
- தேனி மாவட்டத்தில் டி.கள்ளிப்பட்டி, தென்காசி மாவட்டத்தில் மேலகரம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் திப்ரமகாதேவி மற்றும் பேளூக்குறிச்சி ஆகிய கிராமங்களில் சுமார் 3 ஆயிரத்து 589 குடும்பங்களுக்கு, நத்தம் நிலவரித் திட்டப் பணிகள் மேற்கொள்ள மனைப் பட்டா வழங்கப்படும்" ஆகியவற்றை அறிவித்துள்ளார்.