சென்னை: திமுகவின் ஆதிதிராவிடர் நல குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "சமத்துவத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சிதான் திமுக. திமுக மீது கரை பூசலாமா என்று ஒரு கூட்டம் முயற்சி செய்கிறது. அந்த முயற்சி தமிழகத்தில் எடுபடாது. பிறப்பால் அனைவரும் சமம் என்பதைத்தான் நான் பேசினேன். நான் தவறாக எதையும் பேசவில்லை.
நான் பேசியதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்கள். நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும், சமூக ஊடகத்தில் வேகமாக அணியினர் செயல்பட வேண்டும். திமுகவுக்கு எதிராக பரப்பப்படும் அவதூறுகளுக்கு உடனுக்குடன் பதில் கொடுக்க வேண்டும்.
புதிய பாராளுமன்றம் திறப்பு விழாவுக்கு இந்தியக் குடியரசுத் தலைவரை அழைக்காதது ஏன்? குடியரசுத் தலைவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர், கணவரை இழந்தவர் என்பதால் அவரை அழைக்கவில்லை. பாராளுமன்றத்தை திறக்க சாமியார்கள் சென்றார்கள்.
மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டினார்கள். அதற்கு சாமியார்கள் போக வேண்டும். ஆனால், பிரதமர் சென்றார். பிரதமர் சென்றதால் சாமியார்கள் அங்கே போகவில்லை. மதத்தை அரசியலாகவும், அரசியலை மதமாகவும் மாற்ற நினைக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே உடை என்று மாற்ற பாஜகவினர் நினைக்கிறார்கள்.
10 வருட அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் உரிமையை அடகு வைத்து விட்டார்கள். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தி, திமுகவை அடக்கப் பார்க்கிறார்கள். நாங்கள் அடங்க மாட்டோம், மத்திய அரசின் அடக்குமுறைக்கு திமுக குடும்பத்தில் உள்ள கைக்குழந்தை கூட பயப்படாது. திமுகவிற்கு சுயமரியாதை மிக மிக முக்கியம்.
சென்ற முறை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வாங்கிய வாக்குகளை விட, ஒரு சதவிகிதம் வாக்கு இம்முறை குறைந்தாலும், மக்களிடம் திமுகவின் செல்வாக்கு குறைந்து விட்டதாகச் சொல்வார்கள். 40 தொகுதியிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் வேட்பாளர் என நினைத்து வெற்றி பெற வையுங்கள்.
7 அல்லது 8 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும். நமக்குள் இருக்கும் மனக்கசப்புகளை மறந்துவிட்டு, இன்னும் 60 நாட்கள் தேர்தலுக்காக தீவிரமாக பணியாற்ற வேண்டும். 2021 தேர்தலில் அடிமைகளை விரட்டினோம், 2024 தேர்தலில் அடிமைகளின் ஓனர், எஜமானர்களை விரட்ட வேண்டும்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: தேர்தல் பத்திரம் மூலம் பல கோடி நன்கொடை பெற்றது பாஜக.. ஆனந்த் சீனிவாசன் குற்றச்சாட்டு!