திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில், இன்று (பிப்.11) நடைபெற்ற அரசு விழாவில், ரூ.1,191 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் மாநகராட்சி மக்களுக்கு நான்காவது குடிநீர் திட்டம் மற்றும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 165 ஊரக குடியிருப்புக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுமட்டுமல்லாது, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, நீர்வளத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம் ஆகிய துறைகளின் சார்பில், பல்வேறு புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி, சுமார் 5,000 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, "இன்றைய காலகட்டத்தை மட்டும் கருத்தில் வைத்து உருவாக்கப்பட்டதல்ல, திருப்பூர் நான்காவது குடிநீர்த் திட்டம். எதிர்காலத்தையும் கருத்தில் வைத்துதான் இந்த இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.
மேலும், திருப்பூர் மாநகராட்சி மக்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள திட்டங்கள், திருப்பூரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தமிழக மக்களுக்கு அரசு கொடுக்கும் திடங்களுக்கு அங்கீகாரமும், பாராட்டும் எட்டுத்திக்கில் இருந்தும் வருகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், இன்று திறக்கப்பட்ட நான்காவது குடிநீர் திட்டம் மூலமாக, புதிதாக 1.18 லட்சம் வீடுகள் பயனடையும். ஒவ்வொரு நாளும் 23 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும், திருப்பூர் மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பவனார், நீலகிரி எம்.பி ஆ.ராசா, திருப்பூர் எம்.பி சுப்பராயன், திருப்பூர் மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ க.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி திண்டிவனத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு அறிவிப்பு!