சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி நிர்வாகிகளோடு அவ்வப்போது ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள திமுக இளைஞரணி நிர்வாகிகள் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டல நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இரண்டு மண்டலங்களைச் சேர்ந்த நிர்வாகிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மேலும், இளைஞரணி நிர்வாகிகளின் செயல்களை உற்று கவனித்து வரும் உதயநிதி ஸ்டாலின், 2026 தேர்தலுக்குள் அணியின் குறைபாடுகளை சீர் செய்து துடிப்பான நிர்வாகிகளை அமைத்து வலுவான அணியை கட்டமைக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு 2-வது மண்டலத்துக்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீண்டும் இளைஞரணி நிர்வாகிகளோடு ஆலோசனையை இன்றும், நாளையும் நடத்துகிறார்.
இன்று மாலை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், திருவண்ணாமலை தெற்கு மற்றும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். நாளை மாலை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இளைஞர் அணி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ள உதயநிதி ஸ்டாலின், மினிட் புத்தகம், கட்சிப் பணிகள் குறித்த பத்திரிகை செய்திகள், புகைப்படங்கள் ஆகியவற்றுடன் இளைஞர் அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: குண்டாசில் இருந்து தப்ப முடியுமா சவுக்கு சங்கர்? -சட்டம் சொல்வது என்ன?