சென்னை: சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2023 - 2024ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "தந்தை பெரியார் ஒரு பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு காரில் போய்க்கொண்டிருந்த போது, சாலையில் பள்ளிச் சிறுடை அணிந்து கொண்டு பெண்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பெரியாருக்கு 94 வயது, அவருடைய வாகனத்தில் உட்கார்ந்து கொண்டு அந்த காட்சியை பார்த்து, ஒரு சின்ன குழந்தையை போல உற்சாகமாக பெண் குழந்தைகளை பார்த்து கைதட்டி ரசித்து மகிழ்ந்தார். முன்னாள் முதமைச்சர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த போது, மாணவர்கள் பள்ளிக்கு நடந்து செல்லக்கூடாது என்பதற்காக இலவச பேருந்து அட்டையை வழங்கினார்.
தந்தை பெரியாருக்கும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி தான் இன்று இங்கு வந்துள்ள மாணவர் செல்வங்களை பார்க்கும் போது ஏற்படுகிறது. இந்த மகிழ்ச்சி அனைத்து நாளிலும் தொடர வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் கருணாநிதியின் லட்சியம்.
முதலமைச்சர் அரசு பள்ளி, தனியார் பள்ளி என்று பிரித்துப் பார்ப்பது கிடையாது. தனியார் பள்ளிகளில் இருக்கும் அத்தனை வசதிகளும் அரசு பள்ளிகளுக்கும் வரவேண்டும் என்பதற்காக தான் ஒவ்வொரு திட்டத்தையும் முதலமைச்சர் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்.
அதேபோல், விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இந்த அரசு அனைத்து வகைகளிலும் உதவ தயாராக இருக்கிறது. விளையாட்டுத்துறையில் சாதிக்கும் திறமையாளர்களுக்கு உதவிட இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாடு அரசு தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டு இருக்கிறது.
இந்த அறக்கட்டளை மூலம் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு, ஒரு வருடத்தில் ரூ.10 கோடி அளவில் உயரிய ஊக்கத் தொகை நிதி உதவி வழங்கப்படுகிறது. சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் சாதிக்கின்ற மாணவர்களுக்கு உயரிய உக்கத்தொகை வழங்கி தமிழ்நாடு அரசு கவுரப்படுத்தி வருகிறது" எனக் கூறினார்.
திமுக எம்பி கூறியது தவறா? தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் முதல்முறையாக தமிழ்நாடு பதக்க பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது. ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்பை கடன் வாங்கி கணக்கு, அறிவியல் போன்ற வகுப்புகளை நடத்தாதீர்கள்" எனக் கூறினார்.
முன்னதாக, விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசும்போது, கடந்த ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா போட்டிகளில், தமிழ்நாடு 6 வது இடம் பிடித்தது என கூறியதும், அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்தது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசியது: அவரைத் தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, "விளையாட்டுத்துறை மூலம் மற்ற மாநிலங்களையும் தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இலக்கை வைத்துக்கொண்டு இளைய சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்து செல்கிறார்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை என அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது தான் பள்ளிக்கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடியும் என்று நம்முடைய முதலமைச்சர் சொல்லுவார். கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என பல திட்டங்களை கொண்டுவந்துள்ளோம்.
அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் அல்ல, தனியார் பள்ளியில் இருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழாவை நடத்த வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இந்த பாராட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அமைச்சர் அன்பின் மகேஷ் பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சென்னையில் புதிதாக 100 தாழ்தளப் பேருந்து சேவை; இவ்வளவு சிறப்பம்சங்களா?