கோயம்புத்தூர்: தடாகம், பெரிய தடாகம், சோமையனூர், கணுவாய் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தாய் மற்றும் அதன் குட்டி யானை ஊருக்குள் சுற்றி வருகிறது. பகல் முழுவதும் வனப்பகுதிக்குள் இருக்கும் இந்த இரு காட்டு யானைகளும், இரவு நேரத்தில் வனத்தில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உலா வருகிறது. மேலும், வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் அரிசி, தவிடு, புண்ணாக்கு போன்றவற்றை தேடி வீட்டிற்குள் நுழைந்தும் வருகிறது.
நேற்று முன்தினம் இரவு தண்ணீர் பந்தல் பகுதியில் வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசைக்குள் இந்த இரண்டு யானைகளும் புகுந்ததால், அங்கிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் பின் வழியாக தப்பிச் சென்று உயிர் பிழைத்தனர். அதேபோன்று, நேற்று இரவு கணுவாய் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதிக்குள் இந்த இரண்டு யானைகளும் புகுந்துள்ளது. யானைகள் ஊருக்குள் புகுந்த தகவலை அறிந்த மக்கள், வீட்டின் மொட்டை மாடிகளில் யானைகளைக் காண்பதற்காக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது யானைகள் குடியிருப்பு பகுதியில் வந்து கொண்டிருப்பதை அறிந்த சிலர், வீட்டின் காம்பவுண்ட் சுவருக்குப் பின்னால் நின்று கொண்டு வீடியோ எடுக்க முயன்றுள்ளனர். அப்போது திடீரென தாய் யானை வெளியே நின்றவர்களை தாக்க முயன்றதால் அனைவரும் வீட்டிற்குள் தப்பி ஓடியுள்ளனர். எனினும், யானை காம்பவுண்ட் சுவரின் கேட்டை தள்ளிக் கொண்டு சென்று மக்களை தாக்க முயன்றது.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிடவே யானை திரும்பிச் சென்றது. தற்போது யானை தாக்க முயன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த இரண்டு யானைகளும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் ஏற்கனவே அப்பகுதி முழுவதும் எச்சரிக்கை செய்த நிலையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மின்சார பேருந்துகள்; கோவை, திருச்சி, மதுரை மக்களுக்கு அமைச்சர் சொன்ன நற்செய்தி! - minister sivasankar