சேலம்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரண்டு திருநங்கைகள், கடந்த 2022ஆம் ஆண்டு தங்கள் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றுள்ளனர். அப்பொழுது அவர்கள் இருவரும் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுவனிடம், பிரியாணி வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, தாங்கள் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு, அந்த சிறுவனிடம் திருநங்கைகள் இருவரும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், இது குறித்து சிறுவனின் தாயாருக்கு தகவல் தெரிய வந்ததும், அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் திருநங்கைகள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் போலீசார் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கின் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
எனவே, குற்றம் சாட்டப்பட்ட இரண்டு திருநங்கைகளுக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் அனுமன் குரங்கு உயிரிழப்பு!