விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த கிளியனூர் பழைய கொஞ்சிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயபால் மகள் நர்மதா (17), தாஸ் மகள் அனுஸ்ரீ (16). இதில் நர்மதா அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பும், அனுஸ்ரீ 11 ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில், மாணவிகள் இருவரும் நேற்று அதே பகுதியில் உள்ள ஏரியில் குளித்துவிட்டு, பின்னர் கலங்களை பார்ப்பதற்காகச் சென்றனர். அப்போது இருவரும் அதில் தவறி விழுந்தனர். கலங்கலில் தண்ணீர் அதிகமாகச் சென்றதால் இருவரும் நீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் முதற்கட்டமாக நர்மதாவை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அனுஸ்ரீ உடல் கிடைக்காத நிலையில், வானூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் கிராம பொதுமக்கள் தீவிரமாக தேடி வந்தனர்.
ராமதாஸ் கோரிக்கை
இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் சமூக வலைத்தளத்தில், '' விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வானூர் கொஞ்சிமங்கலம் ஒடையில் குளிக்கச் சென்ற நர்மதா என்ற 12-ஆம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க: வீட்டுக்குள் மர்மமான முறையில் சடலமாக கிடந்த தாய் மற்றும் மகன்.. வேலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
ஓடையில் குளிக்கச் சென்ற அனுஸ்ரீ என்ற மாணவியைக் காணவில்லை. அந்த மாணவியை விரைந்து மீட்டெடுக்க வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்'' என வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், தொடர் தேடுதல் பணிக்கு பிறகு அனுஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வானூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், ஃபெஞ்சல் புயலால் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கி கனமழை பெய்து வெள்ளக்காடானது. கனமழை வெள்ள சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், மீண்டும் கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. இந்நிலையில், நீர் நிலைகளில் இறங்கி குளிக்கவும், மீன்பிடிக்க வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனாலும், ஆபத்தை உணராமல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மீன்பிடித்தும் ஆற்றில் குளித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.