திருவாரூர்: திருவாரூர் எஸ்பி ஜெயகுமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நன்னிலம் காவல் நிலையம் எதிரில் நன்னிலம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி மற்றும் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் அருள்ஜோதி உள்ளிட்ட காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்த போது அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட பல நிறுவனங்களின் பெயர்களில் குட்கா புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து காரை ஓட்டி வந்த நபரை பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட அன்னவாசல் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த இலையரசன்(36) என்பது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து இலையரசனிடம் நடத்திய விசாரணையில் அவர் அன்னவாசல் மெயின் ரோடு பகுதியில் குடோன் வைத்து பிஸ்கட் டீலர்ஷிப் எடுத்து திருவாரூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கடைகளுக்கு விற்பனை செய்வதுடன், ஹான்ஸ் பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அன்னவாசல் பகுதியில் உள்ள குடோனில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், 14 கோணி பைகளில் ஹான்ஸ் மற்றும் பான் மசாலா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடையில் இருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இலையரசனின் உறவினரான விக்னேஷ் வயது (25) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் கார் மற்றும் குடோனில் இருந்து 6000 பாக்கெட்டுகள் குட்கா, 12,480 பான் மசாலா பாக்கெட்டுகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இதன் மதிப்பு சுமார் 12 லட்சம் ரூபாய் இருக்கும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து நன்னிலம் காவல் நிலையத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பார்வையிட்டதுடன் சிறப்பாக செயல்பட்ட நன்னிலம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி மற்றும் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் அருள் ஜோதி உள்ளிட்ட காவலர்களை பாராட்டினார்.
இதையும் படிங்க: ரூ.150க்கு பில்ல கொடுங்க.. இல்ல ரூ.140க்கு சரக்க கொடுங்க - திருவாரூர் டாஸ்மாக்கில் மதுபிரியர்கள் வாக்குவாதம்!