சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்தாபுதுபேட்டை எல்லையம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ். இவர் கிருஷ்ணா ஜுவல்லரி என்னும் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி இவரது கடைக்கு வந்த 4 மர்ம நபர்கள் பிரகாஷிடம் துப்பாக்கியைக் காட்டி கை கால்களைக் கட்டி போட்டுவிட்டு அவர்கள் கொண்டு வந்த பையில் சுமார் 1.5 கோடி மதிப்புள்ள தங்க நகை, 5 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.
இந்த விவகாரத்தில் ஆவடி காவல் ஆணையர் தலைமையிலான தனிப்படை சுமார் 14 நாட்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், ராஜஸ்தானில் வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 முக்கிய குற்றவாளிகளான அகோக், சுரேஷ் ஆகியோரை கைது செய்து இருக்கின்றனர்.
அவர்களிடம் இருந்து 40 மதிப்புடைய தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஆவடி காவல் ஆணையரக தனிப்படை போலீசார் ராஜஸ்தான் நீதிமன்றத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை ஆஜர்படுத்தி உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
இவர்களை இன்று அல்லது நாளைக்குள் விசாரணைக்காகச் சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டு இருக்கின்றனர். முன்னதாக நகைக்கடை கொள்ளை சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சேட்டான்ராம், தினேஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா போக இ பாஸ் கட்டாயம் - உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு - Epass To Visit Ooty And Kodaikkanal