மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை மெயின்ரோடு மேலக்கடை பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவர் பெரம்பூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜானகி கடந்த ஜூலை 2ஆம் தேதி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு இளைஞர்கள் ஜானகியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர் அணிந்திருந்த இரண்டு தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி தலைமையில் குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். இந்நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வசந்த் (26) மற்றும் அதே பகுதியில் வசித்து வரும் சிவா (35) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 4 சவரன் தங்கச் சங்கிலி, இரண்டு செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து குத்தாலம் காவல் நிலையத்தில் டிஎஸ்பி திருப்பதி, காவல் ஆய்வாளர் ஜோதி ராமன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், வசந்த் திரிபுரா மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
மேலும், பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய சிவா உடன் சேர்ந்து விடுமுறைக்கு ஊருக்கு வரும் ராணுவ வீரர் வசந்த் வழிப்பறியில் ஈடுபட்டு, அதில் வரும் பணத்தைக் கொண்டு மது அருந்தி சூதாட்டத்தில் ஈடுபட்டு சுற்றித் திரிந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் ராணுவ வீரர் வசந்த் மற்றும் சிவா மீது திருட்டு வழக்குப் பதிவு செய்து குத்தாலம் போலீசார் சிறையில் அடைத்தனர். சிவா மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.