சேலம்: தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள் ஆகியுள்ளனர். குறிப்பாக, கடந்த பத்து நாட்களுக்கு மேலாக 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பத்தின் அளவு சேலத்தில் பதிவாகி வருகிறது. இதில், சேலம் மாவட்டத்தில் நேற்றைய தினம் 108 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி, இந்திய அளவில் அதிக வெப்பம் பதிவாகி மூன்றாவது இடம் பிடித்தது.
இதன் காரணமாக, சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, தினமும் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அத்தியாவசியத் தேவைகள் அன்றி வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். மேலும், ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறையும் குடிநீர் அருந்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள சாலையில், பூபதி என்பவர் அவரது நண்பருடன் கோழி முட்டையை எடுத்து வந்து, சாலையில் ஆம்லெட் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அறிந்து அங்கு வந்த சேலம் டவுன் காவல்துறையினர், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்தும் விதமான செயலில் ஈடுபட்டதாக, பூபதி மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று வீட்டிற்கு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.