சேலம்: சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள பொய்மான் கரடு பகுதியில், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சேலத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற கார் ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கௌதம், காம்கோ ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜெகநாத், சரண், சத்ய பிரவீன் ஆகிய 3 மாணவர்களும் தற்போது சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மல்லூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான காரில் பயணித்த பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த கௌதம், சரண், ஜெகநாத் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காம்கோ, சத்ய பிரவீன் ஆகிய 5 பேரும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இவர்கள் தங்களது கல்லூரி விடுதியில் இருந்து சேலத்தில் உள்ள நண்பர்களின் வீட்டிற்கு சென்றுவிட்டு, பின்னர் சேலத்தில் இருந்து கன்னியாகுமரியில் உள்ள காம்கோ மற்றும் சத்திய பிரவீன் என்பவரின் வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர். அப்போது மது போதையில் காரை இயக்கியதாக கூறப்படும் நிலையில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது, காண்போரைக் கண்கலங்க வைத்தது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள உடற்கூராய்வு அறையில் வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிந்ததும் மாணவர்களின் உடல்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி பெயிண்ட் தொழிற்சாலை தீ விபத்து; பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு!