திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள இரும்புலி மலைக்கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியைச் சுற்றிலும் ரெட்டிபாளையம், கல்பட்டு, கல்குப்பம், மற்றும் அமிர்தி போன்ற வனப்பகுதிகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று திடீரென இரண்டு ஹெலிகாப்டர்கள் இரும்புலி மலை கிராம வனப்பகுதிக்கு மேல் வட்டமிட்டன. இதன் பின்னர் வட்டமிட்ட இரண்டு ஹெலிகாப்டர்களும் திடீரென இரும்புலி மலைக் கிராமம் அருகே தரை இறங்கி உள்ளது.
மேலும், அந்த தரையிறங்கிய ஹெலிகாப்டர்களில் இருந்து விமானிகள் மற்றும் பயணம் செய்த இரண்டு நபர்கள் இறங்கி ஹெலிகாப்டருக்குள் மாறி மாறி ஏறியுள்ளனர். இதனையடுத்து, ஹெலிகாப்டர்கள் மீண்டும் வானில் பறந்தன. திடீரென இரண்டு ஹெலிக்காப்டர்கள் வன கிராமப் பகுதிகளுக்குள் தரை இறங்கியதால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அச்சம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல்துறையினர், இந்த ஹெலிகாப்டர்கள் எங்கிருந்து வந்தது? எதற்காக இந்தப் பகுதியில் தரை இறங்கியது? எதற்காக ஒரு ஹெலிகாப்டரில் இருந்து ஆட்கள் மற்றொரு ஹெலிகாப்டருக்கு மாறினர் என்பது குறித்து விசாரணை செய்தனர்.
இந்த நிலையில் தரையிறங்கிய இரண்டு ஹெலிகாப்டர்களும், அரக்கோணம் ராஜாளி விமானப்படை பயிற்சி நிலையத்தில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த ஹெலிப்காப்டர்கள் மலைப்பகுதிகளில் தரையிறக்கும் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இது வழக்கமாக நடத்தப்படும் பயிற்சிதான் என்றும், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது.. தப்பிக்க முயன்ற 2 பேர் மருத்துவமனையில் அனுமதி..!