திருவண்ணாமலை: ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை புரிந்து அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம். இக்கோயிலுக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி நாட்களில் வருகை புரிந்து அண்ணாமலையாரை வழிபட்டு, 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருவது வழக்கம்.
இதேபோல் நேற்று இரவு நடைபெற்ற கிரிவல நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிரிவலப் பாதையில் 500க்கும் மேற்பட்ட சாதுக்கள் தங்கி உள்ள நிலையில், சூரியலிங்கம் அருகே கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் இரண்டு சாதுகளுக்கு இடையே, வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சாலையில் ஓட ஓட விரட்டி சென்று சாதுக்கள் ஒருவரைக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
அப்போது அந்த வழியாக கிரிவலம் சென்ற பக்தர்கள் மீதும் கல்வீசி தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், கஞ்சா போதையில் இரண்டு சாதுக்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. இனி வரும் காலங்களில் கிரிவலப் பாதையில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் போதை சாதுக்கள் மற்றும் ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது! - காதலனும் சிக்கினார்! - MAYILADUTHURAI pocso CASE