தேனி: கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதியைச் சார்ந்த விவசாயி ஈஸ்வரன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி, குள்ளப்ப கவுண்டன்பட்டி அருகே உள்ள வனப்பகுதி சோதனை சாவடிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் பலியானார்.
இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து குமுளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஈஸ்வரனின் குடும்பத்தார் நீதிமன்றத்தை நாடி ஈஸ்வரன் சுடப்பட்ட சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் எனவும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் எனக் கூறி அவரது உறவினர்கள் வழக்குத் தொடுத்தனர்.
மேலும் இதற்காக பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவை நடத்தி வந்தனர். இந்நிலையில் வனத்துறை அதிகாரிகளால் சுடப்பட்டு உயிரிழந்த விவசாயி ஈஸ்வரன் சம்பவத்தில் நீதிமன்றம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உரிய விசாரணை நடத்தி கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது.
இதனை அடுத்து விவசாயி ஈஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வனவர் திருமுருகன் மற்றும் வன காவலர் ஜார்ஜ் என்ற பென்னிகுட்டி ஆகிய இருவரையும் தனிப்படை போலிசார் தலைமையில் குமுளி காவல்துறையினர் கைது செய்தனர்.
வனத்துறையினரைக் கைது செய்ய உறுதுணையாக இருந்த வழக்கறிஞர் மற்றும் தமிழ் தேசிய ஃபார்வேர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவருமான சங்கிலி அவர்களுக்கு குள்ளப்ப கவுண்டன்பட்டி ஊர் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும். மேளதாளத்துடன் உற்சாகமாக வரவேற்பு செய்தனர். மேலும் அவருக்குப் பொதுமக்களின் சார்பில் பொன்னாடையும் போற்றி பாராட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய ஃபார்வேர்ட் பிளாக் கட்சி தலைவர் சங்கிலி கூறும் போது விவசாயி கொலை செய்த வனத்துறையினர் இருவர் மட்டும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட மீதம் உள்ள ஐந்து நபர்களைக் கைது செய்ய வேண்டும். மேலும் விவசாயி ஈஸ்வரன் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.
வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் உரிய தீர்ப்பு கிடைக்க உறுதுணையாக இருந்த வழக்கறிஞருக்கு ஊர்மக்கள் ஒன்றாகச் சேர்ந்து உற்சாகமாக வரவேற்பு செய்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; பணியில் அலட்சியம்..வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட்