சென்னை: நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பல்கைக்கழக துணைவேந்தர்களுக்கான இரண்டு நாள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக, தற்போது இந்த ஆண்டிற்கான அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் இரண்டு நாள் மாநாடு வரும் மே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டை தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார். மேலும், இந்த மாநாட்டில், ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரியர் உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய மனித வளங்களை ஊக்குவித்தல் குறித்த விரிவான விவாதங்கள், விளக்கங்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
மாநாட்டின் முதல் நாள் அமர்வுகள் (27.05.2024):
- "பல்கலைக்கழகங்களுக்கான நிறுவன மேம்பாட்டுத் திட்ட தொலைநோக்கு ஆவணம்" என்ற தலைப்பில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் எஸ்.வைத்தியசுப்ரமணியம் உரையாற்றுகிறார்.
- "எதிர்கால சிறப்பு ஆராய்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல்" என்ற தலைப்பில் காரக்பூர் ஐஐடி முன்னாள் இயக்குநர் பேராசிரியர் பார்த்தா சக்ரபர்தி உரையாற்றுகிறார்.
- "புதுமை மற்றும் தொழில்முனைவு" என்ற தலைப்பில் CISCO இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் ஸ்ருதி கண்ணன் உரையாற்றுகிறார்.
- "தேசிய சிறப்பு கட்டமைப்பின் மூலம் வாழ்நாள் முழுவதும் கற்றலை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன துணைவேந்தர் முனைவர் பாரதி ஹரிசங்கர் உரையாற்றுகிறார்.
மாநாட்டின் இரண்டாவது நாள் அமர்வுகள் (28.05.2024):
- "இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பல்கலைக்கழகங்கள்" என்ற தலைப்பில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் குழு உறுப்பினர் கார்த்திக் திருநாராயணன் உரையாற்றுகிறார்.
- "ஆரோவில்லில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பல்வேறு தன்னார்வ மற்றும் பயிற்சி திட்டங்கள்" என்ற தலைப்பில் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் முனைவர் ஜெயந்தி எஸ்.ரவி உரையாற்றுகிறார்.
- "வளர்ந்து வரும் தொழில்துறை தேவைகளுக்கான ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல்" என்ற தலைப்பில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி உரையாற்றுகிறனர்.
- "உலகளாவிய மனித வளங்கள்" என்ற தலைப்பில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் உலகளாவிய மனித வளங்களுக்கான தேசியக் குழு தலைவர் பேராசிரியர் எச்.டி.சரண் உரையாற்றுகிறார்.
இவைமட்டுமல்லாது, மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் "பல்கலைக்கழகங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகள்" என்ற தலைப்பில் விளக்கங்களை வழங்கவுள்ளனர்.
NET அல்லது UGC-CSIR தேர்வுகளில் தகுதி பெற்ற மாணவர்கள் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெற்ற மாணவர்கள் மற்றும் அறிஞர்களின் அனுபவப் பகிர்வும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள், மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்த மோதல்; கட்டிப்பிடித்து சமாதானமான காவலர் - நடத்துநர்.. வைரலாகும் வீடியோ! - Police Vs TNSTC Issue