சேலம்: சேலம் மாவட்டம், சிவதாபுரம் அடுத்த செம்மண்திட்டு அருகே உள்ளது பூச நாயக்கனூர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் புகைப்படக் கலைஞராக தொழில் செய்து வருகிறார். இவரது அண்ணன் மகன் விஜய் என்பவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் அருகில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு கலையரசன், பூவரசன், பசுபதி, மணி ஆகிய நான்கு இளைஞர்கள், நேற்று தீபாவளி என்பதால் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்திருக்கின்றனர். விஜயும் அங்கே பட்டாசு வெடித்து இருக்கிறார். இதில் இருதரப்புக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அது முற்றி, கைகலப்பாக மாறி உள்ளது. இதையடுத்து, விஜய் தனது சித்தப்பா சதீஷ்குமாரிடம் நடந்த தகராறு குறித்து தகவல் தெரிவிப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது மீண்டும் கலையரசன், பூவரசன் உள்ளிட்ட இளைஞர்கள் மேலும் சில இளைஞர்களுடன் சதீஷ்குமாரின் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, அந்த இளைஞர்கள் வீட்டின் மேற்கூரை மீது ஏறி சிமெண்ட் அட்டைகளை உடைத்து, வீட்டிற்குள் குதித்து, அங்கு இருந்த டிவி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். மேலும், சதீஷ்குமாரின் மனைவி மற்றும் தாயாருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று இளைஞர்களும், சதீஷ் குமார் வீட்டை விட்டு வெளியேறிய போது அங்கு காரில் வந்த ஜெயக்குமார் என்பவர், தகராறு குறித்து இளைஞர்களிடம் கேட்டுள்ளார். அதைக் கேட்ட இளைஞர்கள் கார் கண்ணாடியை உடைத்து, காருக்குள் இருந்த ஜெயக்குமார், செல்வராஜ், வெங்கடாஜலம் ஆகியோரை கடுமையாக தாக்கிவிட்டுச் சென்றுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: தீபாவளியைத் தண்ணீரில் மிதந்து, கண்ணீரில் களித்த மக்கள்!
இதனையடுத்து, காரில் இருந்த மூவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வீட்டின் மேற்கூரை மீது ஏறி இளைஞர்கள் தகராறில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களின் வாக்குமூலங்களைப் பெற்றும், வீட்டின் உரிமையாளர் சதீஷ்குமாரிடம் புகார் பெற்றும், 8 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கலையரசன், பூவரசன், பசுபதி ஆகிய மூன்று பேரிடம் இரும்பாலை போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஜீவானந்தம், மணி ரங்கநாதன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்