திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியிலிருந்து நாங்குநேரிக்கு ஒரு இளம் ஜோடி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த நபர் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த போது, அவரது மனைவி பின் இருக்கையில் அமர்ந்து சென்றார்.
இந்நிலையில் மர்மநபர்கள் மூவர் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் நாங்குநேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். மூவரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது முன்னால் பைக்கில் சென்ற ஜோடியை பார்த்த மூவரும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் தம்பதியினரின் வாகனத்திற்கு அருகில் சென்று தகாத முறையில் பைக்கில் இருந்த பெண்ணை தொட்டு விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த இளம் ஜோடியினர் அளித்த புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய எஸ்ஐ சக்தி நடராஜன் வழக்குப் பதிவு செய்து மூவரையெம் விசாரித்தார் அதில். ஒருவர் இளம் சிறார் என்பதால் அவரைக் கைது செய்து, சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தி அரசு கூர் நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தார். மீதமுள்ள இருவரை காவல்துறை தேடி வருகிறது.
அரசு கூர் நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒருவரும் தற்போது காவல்துறையால் தேடப்பட்டு வரும் இருவர்களில் ஒருவரும் கடந்த ஆண்டு நாங்குநேரி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரியை சாதி வன்மத்தால் அவரது வீட்டில் சென்று கொடூரமாக அரிவாளால் வெட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளியில் சாதிய பாகுபாடு காட்டியதோடு மாணவன் சின்னதுரையை ஜாதி வன்மத்தோடு கொடூரமாக சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த தாக்குதலில் சின்னத்துரை கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சுமார் ஆறு மாதம் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல் தேறினார். மேலும், மருத்துவமனையில் இருந்தபடியே படிப்பை தொடர்ந்த மாணவன் சின்னத்துரை பிளஸ் டூ பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
அதே சமயம் சின்னத்துரையை தாக்கிய மாணவர்கள் தாங்கள் செய்த தவறை நினைத்துப் பார்க்காமல் முன்பு இருந்ததைப் போல் சகஜமாக திரிவதாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு சமீபத்தில் தெரிவித்து இருந்தார். நெல்லையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய சந்துரு, சின்னதுரை விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்ட சிறுவர்களிடம் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து விடுதலையான பிறகு வீட்டிற்கு செல்லும்போது உங்களது தந்தை உங்களை கண்டித்தாரா என்று கேட்டேன். அதற்கு இல்லை என்றார்கள். பக்கத்து வீட்டிலிருந்து அவன் மோசமானவன் அவன் கூட பழகாதே என்று உனது நண்பர்களை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டதா என்று கேட்டபோது, அப்படி ஒரு சூழல் இல்லை முன்பு எப்படி இருந்தோமோ அதே போல் சகஜமாக தான் இருக்கிறோம் என்றார்கள்.
சொல்லப்போனால், அவர்கள் ஒரு வீரர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களை கண்டிக்காமல் அவர்களை பாதுகாக்க ஒரு சமுதாயம் இருக்கும் வரை ஜாதி பிரச்சனை ஓயாது என்று நீதிபதி சந்துரு வேதனையோடு தனது கருத்துக்களை பதிவு செய்தார். இது போன்ற சூழ்நிலையில் சின்னத்துரை விவகாரத்தில் கைதான இருவர் மீண்டும் ஒரு குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது நீதிபதி சந்திருவின் கருத்துக்களை நினைவு கூறுகிறது.
அதாவது சிறுவர்களை வழி நடத்த வேண்டியவர்கள் சரியான முறையில் அவர்களை கையாளத காரணத்தால், மிக பெரிய குற்றத்தை செய்த போதும் அந்த குற்றத்தை உணராமல் மீண்டும் மற்றொரு குற்றத்தை செய்யும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருப்பதை சந்துரு கருத்து மூலம் உணர முடிகிறது.
இதையும் படிங்க: சேலத்தில் யானை தந்தங்களை கடத்திய மூவர் கைது.. மாறு வேடத்தில் சென்று வனத்துறையினர் அதிரடி!